பயிற்சி மருத்துவர் கொலை விவகாரம் : நீதிபதியிடம் உருகி அழுத சந்தேகநபர்!
மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பகீர் கிளப்புவதாக இருந்தது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் நேற்று சஞ்சய் ராயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவர் திடீரென உடைந்து அழுதார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கடந்த ஆக. 9ம் திகதி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த வழக்கைக் கொல்கத்தா போலீசார் முதலில் விசாரித்த நிலையில், அவர்கள் இதைச் சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே இதில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது நீதிபதி முன்பு திடீரென உணர்ச்சிவசப்பட்ட சஞ்சய் ராய் தான் ஒரு நிரபராதி எனக் கூறி கதறி அழுதுள்ளார்.
அதாவது சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றத்தில் சஞ்சய் ராயை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் சஞ்சய் ராய் மற்றும் சந்தேக நபர்களிடம் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்திய சிபிஐ தரப்பினர் அனுமதி கோரினர்.
இந்திய சட்டப்படி உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றத்தின் அனுமதியும் யாரிடம் இந்த சோதனையை நடத்த விரும்புகிறார்களோ அவர்களின் ஒப்புதலும் தேவை.
இந்த வழக்கில் கைதான சஞ்சய் ராய் தான் உண்மையைக் கண்டறியும் சோதனையை எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் ஏன் இந்த சோதனைக்குச் சம்மதிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது உடைந்து போன சஞ்சய் ராய் கண்ணீர்விட்டுக் கதறி இருக்கிறார்.
தான் நிரபராதி என்று கூறிய அவர், அதை நிரூபிக்க இந்த உண்மையைக் கண்டறியும் சோதனை சரியான வாய்ப்பாக இருக்கும் என்பதாலேயே அதற்குச் சம்மதித்ததாகத் தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், நான் எந்த குற்றமும் செய்யவில்லை. என்னைக் குற்றவாளியாகக் காட்ட முயல்கிறார்கள். இதன் காரணமாகவே என்னைக் கைதும் செய்துள்ளனர். இந்த சோதனை நான் நிரபராதி என்பதை நிரூபிக்கும்" என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து சஞ்சய் ராயக்கு உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும் உத்தரவிட்டது.
சஞ்சய் மட்டுமின்றி குற்றம் நடந்த ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரிடமும் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த 5 மருத்துவர்கள் தான் உயிரிழந்த பயிற்சி மருத்துவருடன் சம்பவம் நடந்த நாளில் இரவு உணவை உண்டது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு இன்று உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகவும் வாய்ப்பு இருக்கிறது.