பிரித்தானிய கலவரங்களுக்கு காரணம் என கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர் விடுதலை
பிரித்தானியாவில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தாக்குதல்தாரி புகலிடக்கோரிக்கையாளர் என்றும் இஸ்லாமியர் என்றும் தகவல் பரவியது.
அதைத் தொடர்ந்து, பிரித்தானியா முழுவதும் கலவரம் வெடித்தது. புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த ஹொட்டல்கள் தாக்கப்பட்டன.
பொலிசார் மீதும் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதுடன், தீவைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன, பிரித்தானியா கலவர பூமியானது. இந்நிலையில், தாக்குதல்தாரி புகலிடக்கோரிக்கையாளர் என்றும் இஸ்லாமியர் என்றும் தகவல் பரப்பியது Channel3Now என்னும் பாகிஸ்தான் ஊடகம் என்றும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, அந்த ஊடகத்துடன் தொடர்புடையவரான Farhan Asif (32) என்பவரை பாகிஸ்தான் பொலிசார் கைது செய்தனர்.
இந்நிலையில்,ஐந்து நாட்கள் Farhan Asifஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தியபின், பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். ஆனால், எதிர்பாராத திருப்பமாக, Farhan Asif இந்த வழக்கில் குற்றமற்றவர் என்று கூறி, லாகூர் நீதிமன்றம் அவரை விடுவித்துவிட்டது.
பிரித்தானியாவில் கலவரங்கள் வெடிக்கக் காரணமான தவறான தகவல்களை Farhan Asif பரப்பியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ள பாகிஸ்தான் பெடரல் விசாரணை ஏஜன்சி, அவரை விடுவிக்கக் கோரியதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
மேலும், இந்த தவறான தகவலை முதலில் வெளியிட்டது Farhan Asif இல்லை என்றும், அவர் வேறொரு சமூக ஊடக இடுகையிலிருந்துதான் அந்த செய்தியை copy-paste செய்துள்ளார் என்றும் தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பாகிஸ்தான் பெடரல் விசாரணை ஏஜன்சி தெரிவித்துள்ளது.