கனடாவில் ஈழத்தமிழர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் - புறக்கணிப்பில் அரசியல்வாதிகள்!
கனடாவில் ஈழத்தமிழர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமையான புலம்பெயர் நாடுகளிலும், தாயகத்திலும் வாழும் தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.
எந்த தேசம் சென்றாலும் தமிழர்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லை என்ற கோஷங்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரம் பெற்றுள்ளன.
கனடாவில் ஈழத்தமிழர்களுக்கு என்று மரியாதையும், கௌரவமும் அந்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ளது. கடும் உழைப்பால் வரி செலுத்துபவர்களில் தமிழர்கள் முதன்மையானவர்கள் என பல தடவைகள் துறைசார் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஈழத்தமிழர்கள் பிரிவுகளாக பிரிந்து செயற்படுவது, தமிழர்கள் மீதான நம்பிக்கையின் மீது கேள்விக்குறியாகும் என பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
கனடிய தமிழர் பேரவை என்ற தனி அமைப்பின் தவறான செயற்பாட்டுக்கு, கனடா வாழ் தமிழர்களின் நிகழ்வொன்றை வெற்றிகரமாக நடந்த முடியாமை பெரும் துரதிஷ்டவசமானது என பலர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் கனடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டினால் முன்னெடுக்கப்பட்ட Tamil Fest தெருவிழாவை அரசியல்வாதிகள், பொதுமக்கள், வியாபார நிறுவனங்கள் என பல தரப்பினரும் புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மார்க்கத்தில் கடந்த 24, 25ஆம் திகதிகளில் ஒழுங்கு செய்யப்பட்ட தெருவிழா பல்வேறு முரண்பாடுகளுடன் நடைபெற்று முடிந்தது. கனடிய தமிழர் பேரவையில் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், இணையம் மூலம் தம்மை தொடர்பு கொள்ளுமாறும் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆண்டுகளை விட இம்முறை இரண்டு நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டதாக ஏற்பாட்டு குழுவின் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பத்தாவது ஆண்டாக நடைபெற்ற தெருவிழாவுக்கு ஆரம்பம் முதல் கடும் எதிர்ப்பு எழுந்திருந்தது. கடந்த வருடத்தின் முடிவில் HD எனப்படும் இமாலய பிரகடனத்தில் கனடிய தமிழர் பேரவையின் பங்கேற்பு முதல் இந்த எதிர்ப்பு எழுந்திருந்தது.
சனிக்கிழமை நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய கனடிய தமிழர் பேரவையின் தலைவர் குமார் ரட்ணம் இமாலய பிரகடனத்தில் கனடிய தமிழர் பேரவையின் பங்கேற்புக்கு மன்னிப்பு கோரினார்.
இம்முறை ஆரம்ப நிகழ்வையும், தொடர்ந்து நடைபெற்ற இரண்டு நாள் நிகழ்வுகளையும் அனைத்து மட்ட அரசியல் தலைவர்கள் பலரும் புறக்கணித்தனர்.
தெரிவு செய்யப்பட்ட தமிழர் பிரதிநிதிகளில் மார்க்கம் நகரின் ஏழாவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினர் ஜுவானிடா நாதன் தவிர ஏனையவர்கள் அனைவரும் இம்முறை தமிழர் தெருவிழாவில் கலந்து கொள்ளவில்லை.
நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய பல வர்த்தகர்களும் இறுதி நேரத்தில் நிகழ்வில் கலந்து கொள்வதில் இருந்து பின்வாங்கி இருந்தனர்.
கலை நிகழ்ச்சிகள் வழங்குவதாக விளம்பரப்படுத்தப்பட்ட பல கலைஞர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதை தவிர்த்தனர். தென்னிந்திய திரைப்பட பாடகர் ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்ட இசை நிகழ்வு சனிக்கிழமை இடைநிறுத்தப்பட்டது.
நிகழ்வு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மதுபோதையில் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இதன்போது தமிழ் ஊடகம் ஒன்றின் பெறுமதிமிக்க வாகனம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. இதற்கு சர்வதேச ரீதியில் தமிழர்கள் தரப்பினால் கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.