தேர்தலில் ஆதரவு குறித்து தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம்: அதிருப்தியில் மாவை
ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை .சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கை தமிழரசுக் கட்சியானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக நேற்று(01) இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியானது ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது.
குறித்த தீர்மானம் தொடர்பில் இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.
அதேவேளை,இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு எனவும் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், சார்லஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.