ஜெனீவாவின் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள்?
ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதை ஜனாதிபதி வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் ஜகத் டயஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினரை இலங்கை அரசாங்கம் தண்டிக்கவேண்டும் என அழுத்தம் கொடுக்கும் மனித உரிமை பேரவையை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பது குறித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவின் சமீபத்தைய அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள ஜகத்டயஸ் இந்த கடும் சவாலை எதிர்கொள்வதில் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி வேட்பாளர்களிற்கும் உள்ள பொறுப்பை வலியுறுத்தியுள்ளார்.
யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்கள் என தான் குற்றம்சாட்டியவர்களை விசாரணைகளிற்கு உட்படுத்தி தண்டிப்பதற்கு இலங்கை தவறிவிட்டதாக குற்றம்சாட்டும் ஜெனீவா வெளிப்புற உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்துதல், நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பொருளாதார தடைகள் பயணத்தடைகளை விதித்தல்,சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் பிற நடவடிக்கைகள் போன்ற தந்திரோபாயங்களை சர்வதேச சமூகம் பின்பற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது என ஜகத்டயஸ் தெரிவித்துள்ளார்..