கடன் மறுசீரமைப்பில் மாற்றம் ஏற்பட்டால் இலங்கைக்கு ஆபத்து: ப்ளூம்பெர்க் இணையத்தளம்
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக நாட்டின் டொலர் பத்திரதாரர்கள்' தங்களது பத்திரங்களை விற்பனை செய்வது குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால் இறுதிக் கட்ட கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்கள் தோல்வியடையும் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் தீவிரமடைந்து வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மையே இந்த நிலைக்கு காரணம் என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. தாம் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதுள்ள நிலைமைகளை மாற்றியமைக்கும் பேச்சுவார்த்தைக்கு திரும்புவோம் என எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளதாக அந்த இணையத்தளத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவுதாரர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் விதிமுறைகளை மேலும் மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் விரும்பினாலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவ்வாறு செய்வது கடினம் என கொலம்பியா த்ரெட் நீடில் முதலீட்டு நிறுவனத்தின் ஆய்வாளர் ஒருவரை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள M&G குளோபல் முதலீட்டு முகாமைத்துவ நிறுவனத்தின் மூலோபாய ஆய்வாளர் ஒருவர், இலங்கை டொலர் பத்திரங்களின் தற்போதைய நெருக்கடியால் தேர்தல் முடிவுகளின் நிச்சயமற்ற தன்மை மற்றும் கடன் மறுசீரமைப்பு காலக்கெடுவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்திருந்தார்.