கனடாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் புதிய நடைமுறை - மாகாண அரசுகள் எதிர்ப்பு
கனடாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் மத்திய அரசாங்கம் முன்மொழிந்துள்ள யோசனைக்கு மாகாண அரசாங்கங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக கியூபெக் மற்றும் ஒன்றாரியோ மாகாணங்களில் மட்டும் தற்பொழுது அகதிகள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை பன்முகப்படுத்தும் யோசனையை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
எனினும் இந்த யோசனைக்கு ஏனைய மாகாண அரசாங்கங்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். போதிய அளவு நிதி ஒதுக்கீடுகளை வழங்காது அகதிகளை மீளக்குடியேற்ற கோருவது பொருத்தமற்றது என நியூ பிரவுண்ஸ்விக் மாகாண முதல்வர் பெலனி ஹிக்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூ பிரவுன்ஸ்விக் மாகாணத்தில் சுமார் 4600 பேரை மீள்குடியேற்றுவதற்கு மத்திய அரசாங்கம் யோசனை முன் வைத்துள்ளது. இந்த அகதிகள் கோரிக்கையாளர்களில் எத்தனை பேர் உண்மையான அகதி கோரிக்கையாளர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கியூபெக் மற்றும் ஒன்றாரியோ மாகாணங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள அகதி கோரிக்கையாளர்களை மீள்குடியேற்றுமாறு இரண்டு மாகாணங்களும் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் அரசாங்கம் இந்த அகதிகளை ஏனைய மாகாணங்களில் குடியேறுவதற்கு திட்டமிட்டு வருகின்றது.
இதேவேளை நிதி ஒதுக்கீடுகளை வழங்காது மாகாணங்களுக்கு ஏதிலிகள் மீளக்குடியேற்றுமாறு கூறப்படாது என மத்திய அரசாங்கத்தின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.