கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வர்த்தகக் கடன்வழங்குனர்களுடன் இணக்கப்பாடு!

#SriLanka #money
Mayoorikka
2 hours ago
கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வர்த்தகக் கடன்வழங்குனர்களுடன் இணக்கப்பாடு!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி சுமார் 17.5 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வர்த்தகக் கடன்வழங்குனர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

 சீன அபிவிருத்தி வங்கியுடன் 3.3 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை மறுசீரமைப்பதற்கான இணக்கப்பாடு இலங்கையால் எட்டப்பட்டுள்ள நிலையில், சீன எக்ஸிம் வங்கி, உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு, வர்த்தகக் கடன்வழங்குனர்கள், சர்வதேச பிணைமுறிதாரர்கள் ஆகியோருடன் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் மூலம் இலங்கையால் சுமார் 17 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்களை மறுசீரமைக்கமுடியும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. 

 இதன்மூலம் வட்டிவீதங்களைக் குறைப்பதற்கும், நாட்டின் நிதியியல் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கும் முடியும் என ஜனாதிபதி செயலகம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

 ஏற்கனவே கடந்த ஜுன் 21 - ஜுலை 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசாங்கம் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. இப்பேச்சுவார்த்தைகளில் சட்ட மற்றும் நிதியியல் ஆலோசகர்களான க்ளிஃபோர்ட் சான்ஸ் எல்.எல்.பி, லிஸார்ட், வைட் அன்ட் கேஸ் மற்றும் ரொத்ஸ்சைல்ட் அன்ட் கோ ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

 அதேபோன்று இலங்கையின் பிணைமுறிகளில் 50 சதவீத பிணைமுறிகளின் உரித்தாளர்களான 10 முக்கிய தரப்பினரை உள்ளடக்கியிருக்கும் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவின் நிர்வாகக்குழு கடந்த ஜுன் 27 - 28 ஆம் திகதிகளில் பாரிஸில் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தது.

 அதனையடுத்து கடந்த ஜுலை மாத முற்பகுதியில் கடன் ஸ்திரத்தன்மை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக இலங்கைக்கும் சர்வதேச பிணைமுறிதாரர் குழுவினருக்கும் இடையில் 37 பில்லியன் டொலர் பெறுமதியுடைய மொத்த சர்வதேச கடன்களில் 12.5 பில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.