போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் நடன இயக்குனர் ஜானி கைது
தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார்.
சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.
இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.
தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான 40 பக்க ஆவணங்களை தெலுங்கானா மகளிர் ஆணையத்தில் இளம்பெண் சமர்பித்தார்.
இந்நிலையில் ஜானி மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் நர்சிங்கி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து தலைமறைவான ஜானியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவாவில் தலைமறைவாக இருந்த அவரை தெலுங்கானா போலீசார் தற்போது கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காவாலா, ரஞ்சிதமே, அரபிக்குத்து உள்பட பல தமிழ் பாடல்களுக்கு நடனம் அமைத்தவரும் சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டவருமான ஜானி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டிருப்பது திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.