பிக் பாஸ் நிகழ்ச்சியால் எனது வாழ்க்கையை இழந்தேன் - நடிகர் சக்தி
"சின்ன வயதிலிருந்தே நான் தோல்வியைப் பார்த்ததே இல்லை. கொஞ்சம் வசதியான வீட்டுப் பையனாகவே வளர்ந்துவிட்டேன். எதிலுமே நான் ஃபெயில் ஆனது கிடையாது.
நன்றாக எம்பிஏ வரை படித்தேன். அதற்கு நேரெதிராக இருந்தது எனது சினிமா வாழ்க்கை. சினிமாவை தொழிலாக எடுத்த பிறகு பல தோல்விகளைச் சந்தித்தேன். தோல்வி என்றால் என்ன என்பதே எனக்குத் தெரியாது.
எனது 30 ஆண்டுகால சந்தோஷமான வாழ்க்கையை இந்த 8 வருடங்கள் அப்படியே புரட்டிப் போட்டுவிட்டன. நான் ஒரு கெட்டவனாகப் பல இடங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளேன்.
ஒருத்தன் தப்பு செய்கிறான் என்றால், அவன் திமிரினால் செய்வான். எனக்கு திமிரே இருந்தது இல்லை. நான் யார் வம்புக்கும் போகமாட்டேன். ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டால் என் உண்மையான முகத்தைக் காட்டவும் தயங்கமாட்டேன். நான் ஒரு சர்ச்சையில் கூட சிக்கினேன்.
நிறைய பேர் கதவைப் பூட்டி வைத்துக் கொண்டு செய்வதை நான் திறந்து வைத்துச் செய்தேன். அவ்வளவுதான் வித்தியாசம். அதைச் செய்யாதவன் யாரும் கிடையாது. நான் கதவைத் திறந்து வைத்துச் செய்ததால் சிலர் ரூமுக்குள் கேமிராவுடன் வந்துவிட்டார்கள். அதற்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது.
ஏனென்றால் அதுதான் அவர்களுக்குச் சாப்பாடு. நான் நல்லவன் என்று பெயர் எடுத்திருக்கிறேன். நல்ல 'குடி'மகன் என்று பெயர் எடுத்திருக்கிறேன். பிக்பாஸ் பார்த்துவிட்டு இவன் பெண்களை மதிக்கத் தெரியாதவன் என்று பெயர் எடுத்திருக்கிறேன்.
கெட்டவன் என்றும் சிலர் சொல்லி இருக்கிறார்கள். இனிமேல் வேறு எந்தப் பெயரையும் வாங்க வேண்டியது இல்லை. கடந்த 10 வருடங்களில் எல்லா பெயரையும் வாங்கிவிட்டேன். எங்க அப்பா அந்த ஷோவுக்கு போகவே வேண்டாம் என்றார். நான் தான் விடாப்பிடியாகப் போனேன்.
நான் பிக்பாஸ் பார்த்ததே இல்லை. அதனால் அதன் ஆழம் தெரியாமல் போய்விட்டேன். அது நான் எடுத்த தவறான முடிவு. நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின் சில பிரச்சினைகளால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன்.
2 வருடம் முன்பு ரஜினி ஒருமுறை அப்பாவுக்குப் போன் பண்ணார். அப்போது என்னைப் பற்றி விசாரித்தார். அவர் மன கஷ்டத்தை சொன்னதுடன் என்னிடம் பேசினார். 'இந்த சறுக்கல் எல்லா நடிகர்களின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. நீ திரும்ப வருவ.
உடனே வீட்டுக்கு வா.. நாம் சந்திப்போம்' என்றார். அவர் உயரத்திற்கு என்னை அழைத்துப் பேச வேண்டிய தேவையே இல்லை. அவர் எனக்கு ஆறுதல் சொன்னார். அவரிடம் நான், 'நான் கமல் ரசிகன்.
ஆனால் உங்கள் வீட்டுப் பிள்ளை' என்றேன். இப்போது பிரச்சினைகளிலிருந்து வெளியே வந்துவிட்டேன். எனக்கு உலகம் என்ன என்பது தெரியும். முன்பு நடிக்கத் தெரியாமல் இருந்தேன். அதனால்தான் பிக்பாஸ் பிரச்சினையானது. நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரிந்தவனாக இருந்தால் வெற்றி பெற்று இருப்பேன்.
நான் செய்தது தவறு என்றால் மக்கள் முன்னால் மன்னிப்பு கேட்கத் தயங்கவே மாட்டேன். கட்டாயம் மன்னிப்பு கேட்பேன்" - சக்தி " ஸ்டார் பட கதை மாதிரி தான் என் கதை ஸ்டார் படம் பார்த்துட்டு நான் கிட்டத்தட்ட அழுதுட்டேன். ஏன்னா அந்தக் கதை என்னுடைய நிஜக்கதை மாதிரிதான்.
ஒரு சீன்ல அப்பா பையன் கிட்ட 'ஆக்சிடென்ட் ஆனதால நீ உன் வாழ்க்கையில தோற்கல. நீ என்னைக்கு கண்ணாடி பார்க்க மறந்தியோ அன்னைக்கே நீ தோத்துட்ட.' என்பார். இதை என் அப்பாவே என்கிட்ட சொல்லி இருக்காரு. அன்னைலிருந்து நான் கண்ணாடி பாக்க ஆரம்பிச்சிட்டேன்." என தெரிவித்தார்.