ஊழலையும் அரச துஸ்பிரயோகங்களையும் ஒழிக்கவே அனுரவை களமிறக்கிய மக்கள்
இலங்கை மக்கள் வரலாற்றில் முதற் தடவையாக இடது சாரி தலைவர் ஒருவரை நாட்டுத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அநுரவின் வெற்றி என்பது அநுரவின் அல்லது ஜேவிபியின் இடது சாரி கொள்கைக்கான வெற்றி அல்ல அது. நாட்டில் புரையோடிப்போயுள்ள இலஞ்சம் ஊழல், முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டதன் விளைவே இந்த வெற்றி. 2019 ஜனாதிபதி தேர்தலில் இனவாதம் பெரும் வெற்றிப்பெற்றது.
2024 இல் தமிழ் பொது வேட்பாளர் தரப்பை தவிர பிரதான சிங்கள் வேட்பாளர்கள் எவரும் இனவாதத்தை பேசவில்லை. இனவாதத்திற்கு வாக்கு கிடைக்காது என்பது அரகலியவுக்கு பிந்திய யதார்த்தம். எனவே நாட்டு மக்கள் ஊழல் மோசடிகளுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
ஆனாலும் அநுரவுக்கு முன் பல சவால்கள் காணப்படுகின்றன. ஒன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவது. இது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பதே இப்போதுள்ள பெரும் கேள்வி. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போது மூன்று பாராளுமன்ற ஆசனங்களுடன் இருக்கும் ஜேவிவி பாராளுமன்ற பெரும்பான்மையினை பெற்றுக்கொள்வது சாத்தியமற்ற ஒன்று.
ஜனாதிபதி தேர்தல் என்பது வேறு பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு, பாராளுமன்ற தேர்தலில் தங்களது தொகுதிகளில் இருக்கும் வேட்பாளர்களின் முகத்திற்கே அதிக வாக்குகள் கிடைக்கின்றன.
எனவே அநுரவுக்கு இதுவொரு சவால். பெரும்பான்மை இல்லாத போது அநுர பாராளுமன்ற பெரும்பான்மைக்கு ஏனைய கட்சிகளுடன் கூட்டு சேர்வதற்கான வாய்ப்புக்களும் மிக மிக குறைவு. எனவே மீண்டும் நாட்டில் இரட்டை ஆட்சி ஏற்படுவதற்கெ அதிக வாய்ப்புக்கள் உண்டு.
அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளில் ஸ்திரமற்ற தன்மையே ஏற்படும். நிறைவேற்று அதிகாரம் ஒரு தரப்பினரிடமும், பாராளுமன்ற ஒரு தரப்பிடமும் காணப்படுமாயின் அது நாட்டுக்கு உகந்தது அல்ல.
இதற்கு கடந்த கால அனுபவங்கள் உண்டு. நிறைவேற்று அதிகாரத்திற்கும், பாராளுமன்ற அதிகாரத்திற்கும் இடையே இழுபறிகள் தொடரும். பாராளுமன்ற அதிகாரத்திற்காக அநுர கூட்டு சேர்ந்தால் அவர் தேர்தல் மேடைகளில் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகும்.
அது மக்கள் மத்தியில் அநுரவுக்கு பெரும் பாதிப்பினை உண்டு பண்ணும். இதனை விட பிராந்திய, சர்வதேச அரசியல் நலன்கள் ஆதாவது புவிசார் அரசியலும் அநுரவுக்கு சவாலாகவே இருக்கும். கோட்டபாயவை அதிகாரத்திலிருந்து கலைப்பதற்கு பின்னால் இருந்த புவிசார் அரசியலும் அநுரவின் விடயத்தில் அதிகம் கவனம் செலுத்தும். முக்கியமாக அநுரவின் இடது சாரி கொள்கை பீஜிங்கோடு நெருக்கமாக இருக்குமானால் இந்திய மற்றும் மேற்குல அரசியல் நிகழ்ச்சி நிரல் காரணமாக நாட்டில் மீண்டும் அமைதியற்ற சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
தனது வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பில் இதுவரை இருந்து வந்த நிலைப்பாட்டிலிருந்து அநுர தன்மை மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் புவிசார் அரசியல் விளையாட்டுத்தளமாக இலங்கை மாறும். ஒருபுறம் சீனா மறுபுறம் இந்தியா, மேறகுலகம் போன்றவற்றை அநுர எவ்வாறு கையாளப்போகிறார் என்பதனை பொறுத்தே இலங்கையின் ஸ்திரமான அரசியல் பொருளாதார சூழல் அமையும்.
ஆனாலும் இந்த மூன்று தரப்பினரையும் ஒரே நேர்கோட்டில் வைத்து கையாள்வது என்பது முடியாத காரியம். ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம் என்பது போலவே இந்த தரப்பினர்களின் நிலைப்பாடுகள் காணப்படுகிறது. எனவே இவர்களை கையாள்வது என்பது மிகவும் கடினமானதாகவே இருக்கும்.
எனவே சவால்கள் நிறைந்த ஒரு சூழல் அநுரவின் முன் காணப்படுகிறது. இதுவரை காலமும் அதிகார கதிரையில் அமராத அவர் வெளியில் இருந்து எதிர்ப்பு அரசியல் செய்தது என்பது இலகுவான காரியும்.
இப்பொழுது அதிகாரத்திற்கு வந்திருக்கின்றார். தற்காலத்தில் அதிகாரத்தில் இருந்து கொண்டு அரசியல் செய்வது என்பது கடினமானது.
தனது வாக்காளர்களையும், திருப்திப்படுத்திக்கொண்டு பிராந்திய சர்வதேச அரசியல் தரப்பினர்களையும் சமாளித்து கொண்டு அநூர பயணிக்க வேண்டும். அதில் வெற்றிப்பெறுகின்ற போது நாட்டில் ஸ்திரமான சூழல் ஏற்படும்