சங்கு வென்றது எப்படி? உலக தமிழர்களின் ஒற்றுமையை ஆளும் சங்கு

#SriLanka #Election #Tamil #parties
Prasu
2 hours ago
சங்கு வென்றது எப்படி? உலக தமிழர்களின் ஒற்றுமையை ஆளும் சங்கு

இலங்கை நாட்டின் 2024 ஆம் ஆண்டின் அரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிங்கள வேட்பாளருக்கும் தோல்வியே அடைவோம் எனத் தெரிந்தும் தமிழ் மக்களின் உணர்வின் பிரதிபலிப்பை சிங்கள தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக் கூற எடுத்த முயற்சியில் “சங்கு சின்னம்” வெற்றியைப் பெற்று இருக்கின்றது.

அதாவது இந்த சங்கு சின்னத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிட்ட பாக்கிய செல்வம் அரியநேந்திரன் இலங்கை நாட்டின் 2024 ஆம் ஆண்டின் பெரும்பான்மையான மக்களால், அரசு தலைவராக தெரிவு செய்யப்பட அனுர குமார திசாநாயக்கவிடம் பதின்மூவாயிரத்து முன்நூற்றியாறு வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவினைக் கண்டிருக்கின்றார்.

அதாவது தமிழர்களின் தாயகப் பூமியான வடக்கு கிழக்கு பகுதியில் இலங்கையின் ஒன்பதாவது அரசு தலைவர் அனுர குமார இரண்டு லட்சத்து முப்பதாயிரத்து இருநூற்று இருபத்தைந்து வாக்குகளைப் பெற தமிழ் பொதுக் கட்டமைப்பால் நிறுத்தப்பட்ட தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன், இரண்டு லட்சத்து பதினேழாயிரத்து முன்னூற்று பத்தொன்பது வாக்குகளை பெற்றே பின்னடைவினை அடைந்தார்.

அதாவது அவர் இலங்கையின் சிங்கள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் வெறும் 5.94 விகித வாக்குளால் தோல்வியை கண்டார் என்ற வகையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இலங்கை தேசத்தில் தாம் சிங்கள அரசு தலைவர்களால் தாம் இதுவரை காலமும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம் என்ற உண்மையை ஜனநாயக ரீதியில் பதிவு செய்து தமது உணர்வை வெற்றி அடைய வைத்து இருக்கின்றார்கள். 

அத்தோடு தமிழ் தேசிய வேடமிட்டு வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடம் பிற கட்சிகளை விட செல்வாக்கினை செலுத்திவரும் கட்சிகளான தமிழரசு கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் எதிர்ப் பிரச்சாரம் செய்தும் தமிழ் மக்களின் பொதுக் கட்டமைப்பால் களமிறக்கப்பட்ட பொது வேட்பாளர் இத்தகைய வாக்கினைப் பெற்றது என்பது பெரும் வெற்றியாகும்.

இதனை விட இந்தப் பொது வேட்பாளர் 1982 ஆம் ஆண்டு அரசு தலைவர் தேர்தலில் பிற தமிழ் தேசியக் கட்சிகளின் பகிஸ்கரிப்பு மற்றும் சிங்கள தலவர்களுக்கான ஆதரவு என எந்த விதமான இடையூறுகளும் இன்றி, வடக்கு கிழக்கு மக்களினது ஆதரவு மட்டும் அல்லாது இலங்கை தமிழ் மக்களின் பூரண ஆதரவுடன் போட்டியிட்ட குமார் பொன்னம்பலம் பெற்ற ஒரு லட்சத்தி எழுபத்தி மூவாயிரத்து தொள்ளாயிரத்தி முப்பத்தி நான்கு வாக்குகளை விட இத்தகைய இடையூறுகளுடன் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட அரியநேந்திரன் இலங்கை முழுவதுமாக பெற்ற வாக்குகள் இரண்டு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்து நூற்றி தொண்ணூற்றி ஆறு என்ற வகையில் அது ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமாகும் என்பதோடு இதுவே இலங்கை நாட்டின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் சிங்களவர் அல்லாத ஒருவர் எடுத்த அதிகூடிய வாக்கு எண்ணிக்கை ஆகும்.

இதற்கு எல்லாம் மேலாய் பகிஸ்கரிப்பு என்ற பெயரிலும் தோல்வியடைந்த சிங்கள வேட்பாளருக்கு ஆதரவு என்ற பெயரிலும் வாக்குகள் சிதைவடையாமலும் தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவை அளித்த கிளிநொச்சி மற்றும் திருகோணமலை பகுதியில் சம்பந்தப் பட்டவர்கள்.

மேலும் இறுக்கமாக ஆதரவுப் பிரச்சாரத்தை செய்து இருந்தால் சங்கு சின்னத்தின் வாக்குகளின் எண்ணிக்கை அந்தப் பகுதிகளில் மேலும் அதிகரித்து இருக்கும் என்பதே யதார்த்தம் ஆகும். எது எப்படியோ இந்த தமிழ் தேசிய உணர்வால் எழுச்சி கொண்ட பொது வேட்பாளருக்கான ஆதரவு டக்ளஸீன் கோட்டை என்று கருதப்பட்ட தீவுப் பகுதியிலும் அங்கஜனின் கோட்டை என்று கருதப்பட்ட உடுப்பிட்டி மற்றும் பருத்திதுறையிலும் அந்தக் கோட்டைகளைத் தகர்த்ததோடு கிழக்கு மாகணத்தின் மட்டு அம்பாறை மாவட்டங்களில் சிங்கள அரசுகளின் அடிவருடிகளான பிள்ளையான் கருணா வியாழேந்திரன் போன்றவர்களின் எண்ணங்களையும் மண்கவ்வ வைத்திருகின்றது.

    அத்தோடு தமிழ் மக்களே இலங்கை அரசு தலவரை தேர்ந்தெடுக்கும் பலத்தை கொண்டவர்கள் என்று தமிழ் தேசியம் என்ற பெயரில் பாராளுமன்றம் சென்று, சிங்கள தேசியத்தை நெஞ்சில் சுமந்து திரிந்து வாழ்ந்து தம்மை புத்தி ஜீவிகள் என எண்ணும் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் ஆகியவர்கள் பொய்யர்கள் என்பதையும் நிரூபித்து இருக்கின்றது என்பதை பதிவு செய்து தமிழ் தேசிய உணர்வில் சங்கு சின்னத்தில் வாக்களித்த என் அருமை தமிழ் சொந்தங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து இலங்கையில் எம் தமிழ் மக்கள் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க நாம் இன்னும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்ற செய்தியை புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்கு உரிமையுடன் தெரிவித்து இலங்கை நாட்டின், ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்களைப் பதிவு செய்கின்றேன்