இன மதத்தை தூண்டாமல் அமைதியாக நடைபெற்ற தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை

#SriLanka #Election #European union
Mayoorikka
2 hours ago
இன மதத்தை தூண்டாமல் அமைதியாக நடைபெற்ற தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் மிகவும் அமைதியானதும், நியாயமானதுமான முறையில் நடாத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நச்சோ சன்செஸ் ஆமர், இம்முறை தேர்தல் பிரசார மேடைகளில் இன, மதபேதங்களை முன்னிலைப்படுத்தி பிரிவினைகளை ஏற்படுத்தக்கூடியவாறான விடயங்கள் பேசப்படாமல் பொருளாதார மீட்சி, மக்களின் அன்றாடப்பிரச்சினைகள் போன்ற அவசியமான விடயங்கள் எதிரொலித்தமை மிகவும் ஆரோக்கியமான விடயம் எனப் பாராட்டியிருக்கிறார்.

 நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுமுடிந்தது. இத்தேர்தல் சுதந்திரமானதும், நியாயமானதுமான முறையில் நடைபெறுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க இலங்கைக்கு வருகைதந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் நச்சோ சன்செஸ் ஆமர் தலைமையில் 70 பேரடங்கிய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவினர், நாட்டின் சகல தேர்தல் மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு தேர்தலுக்கு முன்னரான பிரசார காலப்பகுதி, தேர்தல் தினத்தன்று நடைபெறும் செயன்முறைகள், தேர்தல் முடிவடைந்ததன் பின்னரான நிலைவரம் என்பவற்றைப் பரந்துபட்ட ரீதியில் கண்காணித்தனர். அக்கண்காணிப்பு நடவடிக்கைகளின் முடிவில் அவதானிக்கப்பட்ட விடயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு   திங்கட்கிழமை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இச்சந்திப்பில் தமது ஆரம்பகட்ட அவதானிப்புக்கள் தொடர்பில் விளக்கமளித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைவர் நச்சோ சன்செஸ் ஆமரிடனால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு: இலங்கையின் பிரபல பத்திரிகையொன்று சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து நாட்டுக்கு வருகைதந்திருந்த கப்பலுடன் தொடர்புபடுத்தி, மேற்குலக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்றவாறு செய்தி வெளியிட்டிருந்தது. 

நாம் இலங்கையில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தலைக் கண்காணிக்குமாறு வெளிவிவகார அமைச்சு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாகவே இங்கு வருகைதந்திருக்கிறோம். 

எமக்கு அழைப்புவிடுக்கப்பட்டபோது, இலங்கையைப் பொறுத்தமட்டில் இந்த ஜனாதிபதித்தேர்தல் மிகவும் காத்திரமான தேர்தல் என்பதால் நாம் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டோம். அமைதியான தேர்தல் முதலாவதாக இந்தத் தேர்தல் செயன்முறையைப் பற்றிக் கூறுவதாயின், இது மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது. குறிப்பாக இன, மதபேதங்களை அடிப்படையாகக்கொண்டு பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையிலான கோஷங்கள் இத்தேர்தலில் முன்னிலைப்படுத்தப்படாமை மிகச்சிறந்த விடயமாகும்.

 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தின் பின்னர் முதலாவதாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் பிரசார நடவடிக்கைகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டதுடன், வாக்காளர்களின் ஜனநாயக உரிமைக்கு மதிப்பளிக்கப்பட்டது.

 புதிய முன்னேற்றங்கள் அதேபோன்று இலங்கையின் கடந்தகால தேர்தல் செயன்முறைகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டன. தேர்தல் பிரசார நிதி ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரயோகம், தனிநபர் தரவுப்பாதுகாப்பு சட்டத்தின் பிரயோகம், புதிய வாக்காளர்கள் உள்வாங்கப்பட்டமை போன்றவற்றை அத்தகைய முன்னேற்றங்களாகக் குறிப்பிடமுடியும். இருப்பினும் புதிதாக நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைப்பாதுகாப்பு சட்டம் இம்முறை தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது எவ்வாறு பயன்படுத்தப்படக்கூடும் என்பது பற்றி சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தனர்.

 தேர்தல் ஆணைக்குழுவின் சிறப்பான செயற்பாடு அதேவேளை இந்தத் தேர்தலை நடாத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளிப்படைத்தன்மையுடனும், செயற்திறன்மிக்கவகையிலும், உரிய நியமங்களுக்கு அமைவாகவும் மிகச்சிறப்பாக செயற்பட்டது. குறிப்பாக ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் எந்தவொரு தருணத்திலும் எவ்வித சந்தேகமும் ஏற்படாதவண்ணம் அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

 அதுமாத்திரமன்றி பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் சிறப்பாக இயங்கியதுடன், ஆணைக்குழுவுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான சீரான முறையில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் தேர்தலைத் திறம்பட நடாத்துவதற்கு அவசியமான வளங்களின் பற்றாக்குறையொன்று நிலவியதை அவதானிக்கமுடிந்ததுடன், எதிர்வருங்காலங்களில் அதனை நிவர்த்தி செய்யக்கூடியவகையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதன் இயலுமையை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். பெண் வேட்பாளர் இல்லை அடுத்ததாக இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்ததுடன், அவர்களின் ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக 38 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். 

ஆனால் அவர்களில் பெண் வேட்பாளர் ஒருவர் கூட இல்லை. மிகுந்த கரிசனைக்குரிய இவ்விடயம் தொடர்பில் எதிர்வருங்காலங்களில் விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் அதேபோன்று மேற்குறிப்பிட்ட 38 வேட்பாளர்களில் சிலர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதனால், அவர்களுக்காக அரச நிதி செலவிடப்பட்டிருக்கிறது. 

குறித்தவொரு வேட்பாளரை வெல்லச் செய்வதற்காகவோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ இவ்வாறான வேட்பாளர்கள் களமிறக்கப்படுவது கரிசனைக்குரிய விடயமாகும். எனவே இப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிந்திக்கவேண்டும். வேட்பாளர்கள் செலுத்துவேண்டிய கட்டுப்பணத்தின் தொகையை அதிகரிக்கலாம் என்பதை நான் யோசனையாகக் கூறவில்லை. இருப்பினும் ஒப்பீட்டளவில் நடுத்தர வர்க்க வேட்பாளர்களையும் பாதிக்காதவாறு, அர்த்தமுள்ள வகையில் இதற்குத் தீர்வு காணவேண்டும்.

 இன, மதவாதமற்ற ஆரோக்கியமான பிரசாரங்கள் இம்முறை தேர்தல் பிரசாரக்களத்தில் இன, மதபேதங்களை முன்னிலைப்படுத்தி பிரிவினைகளை ஊக்குவிக்கக்கூடியவாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவில்லை. 

மாறாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு, மக்களின் அன்றாடப்பிரச்சினைகள் போன்ற மிகவும் அவசியமான விடயங்கள் பிரசார மேடைகளில் எதிரொலித்தமை பெரிதும் வரவேற்கத்தக்க ஆரோக்கியமானதொரு போக்காகும். இதனை ஏனைய நாடுகளுக்கான முன்னுதாரணமாகவும் சுட்டிக்காட்டமுடியும்.

 நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகள் ஆனால் தேர்தல் பிரசாரங்களின்போது அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வட்டி அற்ற கடன்வசதி போன்ற சலுகைகளை மக்களுக்கு வழங்குவோம் எனக்கூறி சில வேட்பாளர்கள் பிரசாரம் செய்தனர். இருப்பினும் இவ்வாக்குறுதிகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றவையாகும். 

எனவே இவ்வாறான பொருத்தமற்ற வாக்குறுதிகளை வழங்கும் போக்கு ஏற்புடையதன்று. முறைப்பாடுகள் அத்தோடு பிரசார நடவடிக்கைகளின்போது அரச சொத்துக்கள் முறைகேடாக விதத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் முறைப்படுகள் கிடைக்கப்பெற்றன. குறிப்பாக தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் 5000 முறைப்பாடுகளும், தேர்தல் தினத்தன்று 600 முறைப்பாடுகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

 ஊரங்குச் சட்டம் மேலும் இலங்கை வரலாற்றிலேயே இந்த ஜனாதிபதித்தேர்தல் தான் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தல் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. ஆனால் அன்றைய தினம் மாலை வேளையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சடுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏதேனும் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. எனவே இது ஒரு எடுகோளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என்றார்.