தடையில்லாத மின்சாரத்திற்கான நிதிக் கட்டமைப்பை கையளித்து விட்டுச் செல்கின்றேன்! காஞ்சன
தடைப்படாத எரிபொருள் மற்றும் மின்சாரத்தை வழங்கக் கூடியவாறான போதிய நிலக்கரி, பெற்றோலிய உற்பத்திகளின் கையிருப்புடன் வலுவான நிதி நிலைமையைக் கொண்ட கட்டமைப்பை கையளித்துச் செல்கிறேன் என முன்னாள் மின் மற்றும் சக்தி வலு அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சுக்கான வாகனங்களையும் பொறுப்புக்களையும் நேற்று திங்கட்கிழமை (23) கையளித்ததன் பின்னர் எக்ஸ் வலைத்தளத்தில் வருமாறு பதிவேற்றம் செய்துள்ளார்.
நான் பயன்படுத்திய அரச வாகனங்கள், வலுவான நிதியியல் கட்டமைப்பை கொண்டிருந்த மின் மற்றும் சக்தி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களை போதியளவு பெற்றோலிய உற்பத்தி மற்றும் மின்னுற்பத்திக்கு அவசியமான நிலக்கரி கையிருப்புக்களுடன் நேற்று முன்தினம் கையளித்து விட்டேன்.
இவ்வனைத்து கட்டமைப்புக்களும் சாதகமான ஐந்தொகை செலவின மீட்டு சேவை வழங்கல், விநியோகஸ்தர்களுக்கான உரிய கால நிதி செலுத்துகை மேலதிக வருமானத்தின் ஊடாக திறைசேரிக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட நேர்மறையான விளைவுகளை வழங்கும் நிலையில் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட கடந்த இரண்டு வருட காலத்தில் எனக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
2022 ஆம் ஆண்டு 4-13 மணித்தியால மின் விநியோக துண்டிப்பு, எரிபொருள், நிலக்கரி பற்றாக்குறை, பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் விநியோகஸ்தர்கள் இன்மை, அவற்றுக்கு தேவையான நிதி இன்மை, ஆகிய நிலைமைகளே காணப்பட்டன.
இருப்பினும் தற்போது தடைப்படாத எரிபொருள் மற்றும் மின்சாரத்தை வழங்கக் கூடியவாறான போதிய நிலக்கரி, பெற்றோலிய உற்பத்திகளின் கையிருப்புடன் வலுவான நிதி நிலைமையைக் கொண்ட கட்டமைப்புக்களாக இவற்றை கையளித்துச் செல்கிறேன்.
இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் நிறுவனம் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு தேவையான 123, 888 மெற்றிக்தொன் டீசல், 13627 மெற்றிக் தொன் சுபர் டீசல், 92 ரக ஒக்டென் பெற்றோல் 90,972 மெற்றிக் தொன், 18 ,729 மெற்றிக் தொன் 95 ரக ஒக்டென் பெற்றோல்,விமான பயன்பாட்டுக்கு தேவையான ஜெட் எ 1 எரிபொருள் 30,295 மெற்றிக் தொன் எரிபொருள்கள் ஆகியவற்றை 2024.09.20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கையிருப்பில் காணப்பட்டது.