சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் நாளை மறுதினம் நாட்டுக்கு வருகை!

#SriLanka #IMF #AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago
சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் நாளை மறுதினம் நாட்டுக்கு வருகை!

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வுக்காக நாளை மறுதினம் புதன்கிழமை (ஒக்டோபர் 2) சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

 நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இத்தேர்தலுக்கு முன்பதாக சுமார் ஒருமாதகாலம் நாடளாவிய ரீதியில் சகல வேட்பாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களின் பிரதான பேசுபொருளாக பொருளாதார மீட்சியும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுமே காணப்பட்டன.

 அதற்கமைய தேர்தலுக்கு முன்னர் வொஷிங்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக், நாட்டின் பொருளாதார நிலைவரம் வெகுவாக முன்னேற்றமடைந்திருப்பினும் இன்னமும் நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளவில்லை எனவும், ஆகையினால் மிகக்கடின முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்ட அடைவுகளைப் பாதுகாக்கவேண்டியது மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

 அதுமாத்திரமன்றி 'இலங்கைக்கும், சர்வதேச பிணைமுறிதாரர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டமையை வரவேற்கிறோம். இது இலங்கையின் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதைக் காண்பிக்கிறது' எனக் குறிப்பிட்டிருந்த அவர், சர்வதேச நாணய நிதியச் செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான காலப்பகுதி குறித்து இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் நாம் வெகுவிரைவில் கலந்துரையாடுவோம்' எனவும் அறிவித்திருந்தார். 

 இவ்வாறானதொரு பின்னணியில் நாளை மறுதினம் புதன்கிழமை நாட்டுக்கு வருகைதரவிருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருப்பதுடன் மூன்றாம் கட்ட மீளாய்வுப்பணிகளிலும் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4