நேபாளத்துடன் 12 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட இந்தியா
நேபாளத்தில் 12 மிக முக்கியமான சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும், நேபாள அரசாங்கத்திற்கும் இடையில், நாட்டின் தேசிய முன்னுரிமைப் பட்டியலில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் அண்மையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்வி, சுகாதாரம், விவசாயம், குடிநீர் மற்றும் கலாச்சார துறைகளுக்கான இந்திய அரசின் உதவியுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கான மதிப்பிடப்பட்ட தொகை 474 மில்லியன் நேபாள ரூபாய் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இதில் ஏராளமான பள்ளிகள், நகராட்சிகள் மற்றும் மருத்துவமனைகள், உணவு தானிய சேகரிப்பு மற்றும் விநியோக மையங்கள், விவசாய ஊக்குவிப்பு மையங்கள் மற்றும் பிற சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேபாளத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் இந்தியா 563 க்கும் மேற்பட்ட மிக முக்கியமான சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை 490 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.