சர்வதேசப் பொறிமுறை தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும்!
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேசக் கட்டமைப்புக்களில் முழுமையாகத் தங்கியிருப்பதன் விளைவாக முகங்கொடுக்கவேண்டியிருக்கும் மட்டுப்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச குற்றவியல் சட்டத்தரணி அலைன் வேனர், இது தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கரிசனை வெளியிட்டுள்ளார்.
கனேடிய தமிழர்கள் தேசிய பேரவையானது சர்வதேச நாடுகளில் இயங்கிவரும் மேலும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து 'இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் ஜெனிவா ஊடக அமையத்தில் நடாத்திய கலந்துரையாடலின்போதே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டன.
இக்கலந்துரையாடலில் சர்வதேச குற்றவியல் சட்டத்தரணி அலைன் வேனர், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி சன் கிம் மற்றும் இலங்கையைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ் சிவில் சமூகப்பேரவையின் உறுப்பினர் ஆனந்தராஜ் நடராஜா ஆகியோர் பங்கேற்று கருத்து வெளியிட்டனர்.
அதன்படி கலந்துரையாடலின் தொடக்கத்தில் உரையாற்றிய கனேடிய தமிழர்கள் தேசிய பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ருக்ஷா சிவானந்தன், இலங்கையில் ஆழமாக வேரூன்றியிருக்கும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமாகின்றது எனச் சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதும், போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களிலும் ஈடுபட்டவர்களைப் பொறுப்புக்கூறச்செய்யக்கூடியதுமான சுதந்திரமான சர்வதேச விசாரணை மற்றும் வழக்குத்தொடரல் பொறிமுறையை நிறுவவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து இலங்கையிலிருந்து நிகழ்நிலை முறைமையில் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைத்த ஆனந்தராஜ் நடராஜா, 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் கலவரங்கள், படுகொலைகள், அரச கண்காணிப்புக்கள், ஒடுக்குமுறைகள், வலிந்து காணாமலாக்குதல்கள், காணி அபகரிப்புக்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு வழிமுறைகளிலும் திட்டமிட்ட இனவழிப்பில் ஈடுபட்டுவந்ததாகக் குறிப்பிட்டார்.
அதேவேளை இத்தகைய அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்டதை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்துவரும் நிலையில், சுதந்திரமான சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே இதற்குரிய நீதியை நிலைநாட்டமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேசக் கட்டமைப்புக்களில் முழுமையாகத் தங்கியிருப்பதன் விளைவாக முகங்கொடுக்கவேண்டியிருக்கும் மட்டுப்பாடுகள் குறித்து விளக்கமளித்த அலைன் வேனர், அது தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கரிசனை வெளியிட்டார்.
எனவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பலதரப்பட்ட தேசிய மற்றும் சர்வதேசப் பொறிமுறைகளின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சட்ட ஆலோசகருமான சன் கிம், நீதியை அடைந்துகொள்வதற்கான பயணத்தில் பல்வேறுபட்ட சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டியதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டினார்.
'சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அங்கம்வகிக்காத நிலையில், சர்வதேச நீதிமன்றம் போன்ற ஏனைய கட்டமைப்புக்களின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ளமுடியும்' எனவும் சன் கிம் தெரிவித்தார்.