இலங்கை குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் அவசியம் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் எதிர்காலத்தில் வழக்குத் தொடரக்கூடியவகையில் ஆதரங்களைத் திரட்டுதல் மற்றும் கண்காணித்தல், அறிக்கையிடல் ஆகியவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்கக்கூடிய விதமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைப்பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினரை இலக்குவைக்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக்கொண்டுவருவதன் மூலமும் இவ்விடயத்தில் முன்னைய அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட கொள்கைகளிலிருந்து அவர் விலகி செயற்படவேண்டும் எனவும் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை காலநீடிப்பு செய்யும் வகையில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் எதிர்வரும் வாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் இலங்கை தொடர்பான புதிய அறிக்கையில் 'பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்படையினரின் முறையற்ற நடவடிக்கைகள் தொடர்கின்றன. நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் மறுசீரமைப்புக்கள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை.
மாறாக அடிப்படை சுதந்திரத்தைக் கேள்விக்கு உட்படுத்தக்கூடிய புதிய அச்சுறுத்தல்கள் தோற்றம் பெற்றுள்ளன' எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மற்றும் மீறல்களுடன் தொடர்புடைய அதிகாரிகளைப் பொறுப்புக்கூறவைப்பதற்குத் தவறியிருக்கின்றன.
இருப்பினும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியளித்திருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நீதியை நிலைநாட்டும் அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் செயற்பாட்டாளர்களைப் பாதுகாப்பதன் ஊடாக அந்த வரலாற்றை மாற்றியமைக்கமுடியும். அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானத்தைத் தக்கவைப்பதற்கும்,
நீதிக்கான எதிர்பார்ப்பைப் பேணுவதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைத்திருப்பை உறுதிசெய்வதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் இன்றியமையாதவையாகும்.
எனவே இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான ஆணையை ஏற்கனவே வழங்கியிருக்கும் தீர்மானத்தை (51/1) மேலும் இரு வருடங்களுக்குக் காலநீடிப்பு செய்யவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.