வறுமை மற்றும் பசி கொடுமையை அனுபவிக்கும் 9 மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள்
9 மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் வறுமையையும் பசிக்கொடுமையையும் அனுபவிப்பதாகவும், வேறு வழியில்லாமல், அவர்கள் உணவு வங்கிகளை சார்ந்திருக்கும் நிலையில் இருப்பதாகவும், தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
பிரித்தானியாவின் Trussell என்னும் தொண்டு நிறுவனம், நாடு முழுவதும் 1,400 உணவு வங்கிகளை நிர்வகித்துவருகிறது.
சமீப காலமாக உணவு, வீட்டை வெப்பப்படுத்துதல், உடை மற்றும் அன்றாட தேவைகளைப் பெற கஷ்டப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதாக அந்த தொண்டு நிறுவனம் தெரிவிக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமையை ஒப்பிடும்போது, தற்போது கூடுதலாக ஒரு மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் இருப்பதாகவும், வறுமைக்கோட்டுக்கு 25 சதவிகிதம் கீழ் உள்ள வருவாயைக் கொண்டு வாழ்ந்துவருவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமையை ஒப்பிடும்போது, தற்போது கூடுதலாக 3 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது Trussell.
ஆகவே, உணவு வங்கிகளை நாடும் அத்தகைய குடும்பங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துவருவதாக தெரிவிக்கிறது Trussell தொண்டு நிறுவனம்.
கடந்த ஆண்டில் மட்டும் 3.1 மில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ள Trussell அமைப்பு, ஒரு நல்ல சமுதாயத்தில் உணவு வங்கிகளுக்கான அவசியம் இருக்கக்கூடாது என்றும், ஆகவே, உணவு வங்கிகளே தேவைப்படாத ஒரு நிலை வேண்டும் என்றும் கூறுகிறது.
ஆகவே, அரசு குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருவாய் போன்ற நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம், மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காக உணவு வங்கிகளை நாடியிருக்கும் நிலையை மாற்றவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது Trussell தொண்டு நிறுவனம்.