சென்னையில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான ரயில்கள்
கவரைப்பேட்டையில் மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதன் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது ரயில் பாதை சீரமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதில் காயமடைந்த சுமார் 19 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்ற பயணிகள் ரயில் மற்றும் தமிழக அரசு ஏற்பாடு செய்த பேருந்துகள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மீண்டும் தர்பங்காவுக்கு மாற்று ரயில் மூலம் புறப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் ரயில் பாதை மோசமாக சேதமடைந்துள்ளது. சுமார் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அதில் சுமார் 7 பெட்டிகள் ரயில் பாதையின் குறுக்கே உள்ளது.
அதனை கிரேன் மூலம் ரயில்வே ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். பேட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி உள்ள காரணத்தால் வெல்டிங் செய்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எப்படியும் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைய சுமார் 15 மணி நேரத்துக்கு மேலாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இந்த பாதையில் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து காரணமாக இரு மார்க்கத்திலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.