டாடா நிறுவனத்தின் புதிய தலைவராக ரட்னாவின் சித்தி மகன் தேர்வா?
டாடா அறக்கட்டளைகளின் புதிய தலைவராக நோயல் டாடா பதவியேற்றுள்ளார். இது, டாடா குழுமத்தின் பல அறக்கட்டைகளை உள்ளடக்கியது.
நோயல் டாடா, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர். ரத்தன் டாடா மும்பையில் புதன்கிழமை இரவு காலமானார். அதன் பிறகு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் புதிய தலைவர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, 67 வயதான நோயல் நேவல் டாடா தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நோயல் டாடா ஏற்கெனவே டாடா சன்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
ரத்தன் டாடாவுக்கு பிறகு, தற்போது நோயல் டாடா சுமார் ரூ.34 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தை வழிநடத்துவார். நோயல் டாடாவின் நியமனம் தொடர்பாக, டாடா அறக்கட்டளை அதிகாரபூர்வ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நோயலின் நியமனம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயல் டாட்டவை தேர்வு செய்தது ஏன்?
"இவ்வளவு பெரிய குழுவின் பொறுப்பில் இருப்பவர் பணிவாக இருக்க வேண்டும். அவரிடம் எந்த ஈகோவும் இருக்கக்கூடாது, பொறுப்பு கொடுக்கப்படும்போது கர்வம் இருக்கக்கூடாது..." டாடா குழுமத்தின் வாரிசு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ரத்தன் டாடாவின் எண்ணங்கள் இவை.
தனக்குப் பின் வருபவர் தொலைநோக்குப் பார்வையுடையவராக இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு குழுமத்தை வழிநடத்தக்கூடிய வயதுடையவராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ரத்தன் டாடாவுக்கு திருமணமாகவில்லை, அவருக்கு குழந்தையும் இல்லை. இதனால், அவரது நெருங்கிய உறவினர்களிடம் டாடா குழுமத்தின் நிர்வாகப் பொறுப்பை அவர் ஒப்படைக்கலாம் என்ற கருத்து நிலவியது.
ரத்தன் டாடாவின் மரணத்திற்குப் பிறகு, டாடா குழுமத்தில் ரூ.34 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 66.4 சதவீத பங்குகளை வைத்திருக்கும் 13 அறக்கட்டளைகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்பதுதான் மிகப்பெரிய ஊகமாக இருந்தது.
அப்போது, டாடா அறக்கட்டளைகளின் தலைவர் பொறுப்புக்கு நோயல் டாடாவின் பெயர் வலுவாகப் பேசப்பட்டு வந்தது. நோயல் டாடா ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர்.
யார் இந்த நோயல் டாடா?
நோயல் டாடா, நேவல் டாடா-சைமன் டாடாவின் மகன் மற்றும் ரத்தன் நேவல் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.
நோயல் டாடா பிரிட்டன் சசக்ஸில் பட்டம் பெற்றார். பின்னர், இன்சீட் (INSEAD) எனப்படும் சர்வதேச தொழிற்பயிற்சிப் பள்ளியில் சர்வதேச நிர்வாகத் திட்டத்தில் (International Executive Programme) படித்தார்.
நோயல் டாடா தற்போது டாடா இன்டர்நேஷனல் லிமிடெட், ட்ரெண்ட் (Trent), வோல்டாடாஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் தலைவராக உள்ளார்.
டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக அவர் டாடா குழுமத்துடன் இணைப்பில் உள்ளார்.