அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஏற்றுக்கொள்ள மாட்டோம்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை முழுமையாக ஆராய்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே. டி அல்விஸ் தலைமையிலான குழுவின் அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP இன்) ஓய்வுபெற்ற பொலிஸ் மன்றத்தில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) ரவி செனவிரத்ன மற்றும் முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர இணைந்த பின்னரே குறித்த குழு, அவர்களை மட்டுமே இலக்கு வைத்துள்ளது என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
NPP யின் ஓய்வுபெற்ற பொலிஸ் மன்றம் ஜூன் 09, 2024 அன்று உருவாக்கப்பட்டது என்றும், ஓய்வுபெற்ற பொலிஸ் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு சரியாக மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜூன் 12, 2024 அன்று அந்தக் குழு (ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே. டி அல்விஸ் தலைமையிலான குழு) நியமிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்னதாக செப்டம்பர் 15 ஆம் திகதி, சமர்ப்பிக்கும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.