ரணில் மீது தொடுக்கப்படும் வழக்கு: உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
போராட்ட இயக்கத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகவும், அடிப்படை உரிமைகளை மீறியதாகவும் சோசலிச இளைஞர் சங்கம் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (22) அனுமதி வழங்கியுள்ளது.
அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் சோசலிச வாலிபர் சங்கத்தின் மனுவில், முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிடுமாறு மனுதாரர்களின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை ஏற்று, மனுவை திருத்துவதற்கும் உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
சோசலிச இளைஞர் சங்கத்தின் குழு உறுப்பினர் மகேஷ் இந்துனில் தாக்கல் செய்த மனுவில், கறுவாத்தோட்டம், மருதானை, கொம்பஞ்சா வீதிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் குழு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27ஆம் திகதி, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்துக்கு அருகில் மனுதாரர் மகேஷ் இந்துனில், போராட்டம் நடத்தியதாகவும், அவர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தமைக்காக தமது அமைப்பின் உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்ததாகவும், சட்டத்திற்கு முரணாக குறித்த அதியுயர் பாதுகாப்பு வலயம் ஸ்தாபிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர் மகேஷ் இந்துனில் இதனால், உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.