துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது!

#SriLanka
Thamilini
1 year ago
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயானத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டியில் சென்ற நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு முன்பாக காரில் வந்த இனந்தெரியாத நபர்களால் முச்சக்கரவண்டியில் சென்ற நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் கிராண்ட்பாஸ் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்படி, இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு சந்தேகநபர்கள் வந்த காரின் சாரதியான புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் வத்தளை பிரதேசத்தில் வைத்து நேற்று (31) மாலை இரண்டு கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய ஹந்தல, வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

மேலதிக விசாரணைகளின் போது, ​​சந்தேகநபர் வெளிநாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்த நபரின் வழிகாட்டலின் பேரில் இந்தக் குற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கிராண்ட்பாஸ் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4