முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாததற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த 23 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கச் சென்றதாகத் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பிரதிவாதிகள் முன்வைத்த கருத்துக்களால் திருப்தியடையவில்லை என்று கூறிய நீதிபதி, அவருக்கு கூடுதல் பிணை வழங்க உத்தரவிட்டார். இதன்படி 25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதை அடுத்து, வழக்கின் விசாரணை ஜனவரி 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் சதொச ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.