நாட்டின் பல மாகாணங்களில் கனமழை பெய்யும் : மண்சரிவு எச்சரிக்கையும் நீட்டிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் அதிகபட்சம் 100 மி.மீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகலாம்.
. வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 08 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களின் 30 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இன்று மாலை 4 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு அமுலில் இருக்கும் என கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, கேகாலை மாவட்டத்தில் வரகாபொல மற்றும் யட்டியந்தோட்டை, குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, மாத்தறை மாவட்டத்தில் கொட்டாபொல மற்றும் அக்குரஸ்ஸ, நிவித்திகல, அயகம, பலாங்கொடை, இம்புல்பே, ஓபநாயக்க, கிரியெல்ல மற்றும் கிரியெல்ல ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள, கண்டி மாவட்டத்தில் உடபாலயத்த மற்றும் யட்டிநுவர, புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, தெஹியோவிட்ட மற்றும் கேகாலை மாவட்டத்தில் கேகாலை ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.