தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் தனது 80 ஆவது வயதில் காலமானார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
நேற்று இரவு சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி கணேஷின் மறைவிற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடாக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து சிறப்பித்துள்ளார். டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி வந்தார்.
தூத்துக்குடியில் பிறந்த இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். டெல்லி கணேஷ் 1976 இல் இருந்து தற்போது வரை 400 இக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அத்துடன் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'தில்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய வான்படையில் டெல்லி கணேஷ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.