வரிச் சுமையிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் - சஜித்!
வரிச் சுமையிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புதிய உடன்படிக்கையை நிறைவேற்றும் வகையில் தமது கட்சியை வெற்றிபெறச் செய்யுமாறு அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் செல்கிறார்.
இந்த சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை மாற்றி புதிய ஒப்பந்தத்திற்கு செல்ல வேண்டும். சர்வதேச நாணய நிதியம் கூறியது போல் கடன் கொடுப்பனவுகளின் தொடக்கத்தை 2033 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும்.
இல்லாவிட்டால், இதை அப்படியே தொடர்ந்தால், 2028க்குள், நம் நாட்டில் 2022 மாதிரியான ஒரு சூழ்நிலை உருவாகி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.