UAEஇல் தங்கியுள்ள இலங்கையர்கள் இணைய மோசடி மையங்களுக்கு அனுப்பப்படுவதாக தகவல்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) தற்போது தங்கியுள்ள இலங்கையர்கள் மியான்மரில் உள்ள இணைய மோசடி மையங்களுக்கு குழுக்களாக அனுப்பப்பட்டு வருவதாகவும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணிக்கு (NAHTTF) நம்பகமான வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளது. புதிதாக இலங்கை பிரஜைகள் அங்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மியான்மரில் உள்ள சைபர் மோசடி மையங்களுக்கு ஆட்சேர்ப்பு பல்வேறு வடிவங்களில் அதிகரிப்பது குறித்து NAHTTF பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
வெளிநாடுகளில் அதிக ஊதியம் பெறும் தகவல் தொழில்நுட்பப் பதவிகளை வழங்குவதாகக் கூறி கடத்தல்காரர்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை கவர்ந்திழுப்பது சமீபத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்ற நாடுகளில் ஐடி துறைகளில் அதிக ஊதியம் பெறும் பதவிகளை வழங்குவதாக உறுதியளித்து தொழிலாளர்களை ஈர்க்கின்றனர்.
இந்த நபர்கள் வேலைக்கான நேர்காணல் என்ற போர்வையில் துபாய் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மியான்மரில் உள்ள சைபர் மோசடி மையங்களில் சட்டவிரோதமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி மையங்களில் அவர்கள் மின்சாரம் தாக்குதல் போன்ற மன மற்றும் கொடூரமான உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவது விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.