கோடீஸ்வர வர்த்தகர்கள் தேர்தலில் ஈடுபடும் வீதத்தில் வீழ்ச்சி!: பஃப்ரல் அமைப்பு
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் பலன்களை எதிர்ப்பார்க்க முடியாது என்பதால் சில மனக்கசிவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களை மையமாகக் கொண்டு கோடீஸ்வர வர்த்தகர்கள் உள்ளிட்ட பிரபுக்கள் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு ஆதரவு வழங்குவது 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
அநேகமான வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளில் மந்தமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளமைக்கான முக்கிய காரணம் இதுவே எனவும் வெளிநாடுகளில் உள்ள பிரபுக்களும், வர்த்தகர்களும் கூட தேர்தல் வேட்பாளர்களின் பிரசாரங்களுக்கு உதவும் மனநிலையில் இல்லை எனவும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பிரசார விளம்பரங்களுக்காக பணம் செலவிடுவதும் இரண்டு மடங்கால் குறைவடைந்துள்ளதாக கூறும் பஃப்ரல் அமைப்பு, அநேகமான வேட்பாளர்கள் தங்களது பிரசாரங்களுக்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தலுக்குரிய செலவு வரம்புகள் விதிக்கப்படுவதும்,விளம்பரங்களுக்கு பணம் செலவழிப்பது குறைவதற்கு மற்றொரு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வது அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 8000 வேட்பாளர்களில் 7000 பேர் மட்டுமே நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.