மட்டக்களப்பில் மிகவும் சுமுகமான முறையில் இடம்பெற்று வரும் வாக்களிப்பு!

#SriLanka #Batticaloa
Mayoorikka
1 week ago
மட்டக்களப்பில் மிகவும் சுமுகமான முறையில் இடம்பெற்று வரும் வாக்களிப்பு!

இலங்கையின் 10 வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் திட்டமிட்டதன் அடிப்படையில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் வாக்களிப்புக்கள் மிகவும் சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

 மக்கள் தமக்குரிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்காக ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டு வருவதையும் காணமுடிகின்றது.

 பாராளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 23 அரசியல் கட்சிகளும், 33 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 56 வேட்புமேனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

 அதில் 22 அரசியல் கட்சிகளினதும், 27 சுயேட்சைக் குழுக்களினதுமாக மொத்தம் 49 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 5 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக இம்முறை 392 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். ஒரு அரசியல் கட்சியினதும், 6 சுயேச்சை குழுக்களினதுமாக மொத்தம் 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தபால் மூலமாக வாக்களிப்பிற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 14,222 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

 எனினும் 14,003 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாக, மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 449,686 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

அதில் கல்குடா தொகுதியிலிருந்து 134,104 பேரும், மட்டக்களப்புத் தொகுதியிலிருந்து 210,293 பேரும், பட்டிருப்புத் தொகுதியிலிருந்து 105,289 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளளர். இம்மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் கல்குடா தொகுதியில் 123 வாக்களிப்பு நிலையங்களும், மட்டக்களப்பு தொகுதியில் 197 வாக்களிப்பு நிலைங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 122 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

 வாக்களிப்புக்கள் பிற்பகல் 4 மணியுடன் நிறைவு பெற்றதும், வாக்கெண்ணும் நிலையமாகவுள்ள, மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படவுள்ளன. அங்கு 46 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 37 சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களும், 9 தபால்மூல வாக்கெண்ணும் நிலையங்களுமாக அமைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 218 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பாரிய வன்முறை சம்பவங்கள் இதுவும் மாவட்டத்தில் பதியப்படவில்லை.

 இந்நிலையில் முப்படையினரும் மாவட்டத்தின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதோடு, தேர்தல் கடமைகளுக்காக 6,750 அரச உத்தியோகஸ்த்தர்களும், 1900 பொலிஸார் உள்ளிட்ட விசேட அதிரடிப்படையினரும், 300 இற்கும் மேற்பட்ட வாகனங்களும், கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளன.

 இதேவேளை தேர்தல் கண்காணிப்புக்களுக்காக உள்நாட்டு, வெளிநாட்டு, கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!