அதீத அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யமாட்டோம் - டில்வின் சில்வா!
தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவது பாரிய சவாலாகும் என கூறியுள்ள NPP உறுப்பினர் டில்வின் சில்வா, NPP க்கு வழங்கப்பட்ட அதீத அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதை NPP அரசாங்கம் உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனுக்காக பயன்படுத்தவும், மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவும் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள அவர், NPP மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும், அதிகப்படியான அதிகாரத்தை கவனமாகப் பயன்படுத்துவதற்கு NPP க்கு பாரிய பொறுப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதீத அதிகாரம் ஊழல் செய்யும் என்ற கருத்து சமூகத்தில் இருப்பதாகவும், 1977க்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் மக்களை ஒடுக்கவும், பொதுச் சொத்துகளைத் துஷ்பிரயோகம் செய்யவும் தீவிர அதிகாரத்தைப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.
NPP மக்களை அடக்குவதற்கு அதீத அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாது, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும், மோசடி மற்றும் ஊழல் அற்ற சமூகத்தை உருவாக்குவதற்கும், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் என சில்வா கூறினார்.