ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து ஆலோசனை
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றுக்கு முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள உட்பூசல்களுக்கு மத்தியில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளரால் முன்மொழியப்பட்டதாக கூறப்படும் கருணாநாயக்கவை, தேசியப் பட்டியல் உறுப்பினராக முன்னிறுத்துவதற்கு கட்சி எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்திருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனமும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அணிக்கு மற்றைய இடமும் ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்தது. அத்துடன், புதிய ஜனநாயக முன்னணியில் இருந்து பாராளுமன்றத்திற்கு வருபவர்களை நியமனம் செய்வதற்காக கட்சி இன்று (19) கூடுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கீகாரம் இன்றி, ரவி கருணாநாயக்கவை தேசியப் பட்டியலில் இணைத்து புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்டர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இச்சம்பவம் ஊடகங்களில் வெளியான நிலையில், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இதன்படி, புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் தம்மை நியமித்ததாகக் கூறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்படக் கூடிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நேற்று அவசரமாக ஒன்றுகூடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.