வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை
அந்தமான் அருகே உருவான தாழ்வு (Depression) தற்போது சாதாரண தாழ்வு நிலையாகி தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் கிழக்கு கடற்பரப்பை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட இந்தியாவில் இருந்து வங்காளவிரிகுடா ஊடாக இலங்கை நோக்கி பயணிக்கும் நீராவி அற்ற வறட்சியான குளிர் காற்றின் தீவிரம், கடல் வெப்பம், கடல்நீரோட்டம் போன்ற புறக்காரணிகளால் முன்னரே கணிக்கப்பட்ட தாழமுக்கத்தின் தீவிரத்தன்மை, பயணிக்கும் பாதை, கரைகடக்கும் நிலப்பகுதி என்பன வெகுவாக மாற்றமடைந்துள்ளன.
மேலும், கடந்த சில தினங்களாக இது பெரும் புயலாக உருவெடுக்கும் என்று பல வானியலாளர்களால் எதிர்வுகூறப்பட்டாலும், இப்போது அதற்கான சாத்தியக்கூறுகள் கிட்டத்தட்ட இல்லாமலே போயுள்ளன.
Low pressure என்ற நிலையிலேயே நீடித்து அதீத மழைவீழ்ச்சியை மட்டுமே கொடுக்கபோகும் இந்த நிகழ்வினால், கிழக்கு மாகாணத்தில் 24/11/2024 ஞாயிறுமுதல் கனமழை பெய்யத்தொடங்கும்.
தொடர்ந்தும் தாழமுக்கம் இலங்கை கடற்பரப்பிலேயே அங்குமிங்குமாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மழைமேகங்கள் அனைத்தும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பின் மேலாகவே குவிக்கப்படும்.
இதன் விளைவாக வருகின்ற 24 ஞாயிறு முதல் 27ம் திகதி வரையான காலப்பகுதியில் வடகிழக்கில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடிய தொடர் மழைவீழ்ச்சி பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்படக்கூடிய தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் வடிகால்களை சீரமைத்தல், உடமைகளை பாதுகாத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்வது சேதாரங்களை குறைக்க உதவும்.