அரசு முறை பயணமாக குவைத் புறப்பட்ட பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு புறப்பட்டார். அரசுமுறை பயணமாக இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் பயணமாக குவைத் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
கடைசியாக 1981ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு தற்போதுதான் பிரதமர் மோடி செல்கிறார்.
குவைத் நாட்டின் அமிராக இருக்கும் ஷேக் மீஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். பிற்பகலில் அமிரி டெர்மினலை சென்றடையும் பிரதமர் மோடி வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமிற்கு சென்று அங்குள்ள இந்திய தொழிலாளர்களை சந்திக்கிறார்.
இன்று மாலை ஷேக் சாத் அல் அப்துல்லா உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கிறார். இதையடுத்து வளைகுடா கால்பந்து தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.