அர்ச்சுனாவின் கைது! அரசியல் ரீதியாக NPP அரசாங்கத்தின் பழிவாங்கலா?
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் பொலிஸாரினால் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
அனுராதபுரம் பகுதியில் வைத்து போக்குவரத்து போலீசாருடன் அர்ச்சனா ராமநாதன் முரண்பட்டிருந்த அந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மக்கள் மத்தியில் பல சந்தேகங்களையும் பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது. அதேவேளை இந்த கைதுக்கு பின்னால் ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்குமா? அரசியல் உள்நோக்கம் இருக்குமா? இதுபோன்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.
போக்குவரத்தப் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டிருந்தார். இந்தநிலையில் அனுராதபுரம் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவருடைய பெயரை மாறி சொல்லி அர்ச்சுனாக்கு பதிலாக லோச்சனா என்று கூறப்பட்டு இருந்தது.
அதன்பின்னர் நீதிமன்றத்தில் இதுதொடர்பில் ஆராயுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் மாசி மூன்றாம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் அவசர அவசரமாக இவரை கைது செய்ய வேண்டியதன் நோக்கம் என்ன? இதன் பின்னணி என்ன என பல சந்தேகங்களை எழுப்புகின்றது.
இந்தநிலையில் நாளை மறுதினம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அணுரகுமாரா திசாநாயக்கா யாழ்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அந்த நேரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதாவது அர்ச்சுனா ராமநாதனின் தலைமையில வேலையில்லாத பட்டதாரிகள் ஒரு ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுக்க திட்டமிட்டு இருந்தார்கள்.
இந்தநிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் போலீசார் யாழ் நீதிமன்றத்தில் அந்த போராட்டம் நடைபெறக் கூடாது என்று அதற்கு தடை உத்தரவு வாங்கி இருக்கிறார்கள். அந்த தடை உத்தரவு சம்பந்தமான அறிவித்தல் யாழ்ப்பாண நீதிமன்றம், அர்ச்சுனா ராமநாதன் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினுடைய தலைவருக்கும் சம்பந்தப்பட்ட ஏனைய முக்கியமான நபர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
இருந்தும் அதற்கிடையில் இன்று ராமநாதன் அர்ச்சுனா அனுராதபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அதேவேளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது யாழ்ப்பாண செயலகத்தில் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அர்ச்சுனா கலந்து கொள்வதற்கான அழைப்பு ஏற்கனவே அவருக்கு உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே அதில் அவர் கலந்துகொண்டு பல்வேறு விதமான கேள்விகளை தான் முன்வைக்க இருந்ததாகவும் அர்ச்சுனா தெரிவித்திருந்தார். அதாவது பல்வேறு விதமான பிரச்சனைகளை ஜனாதிபதி அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு வருவதற்கு தான் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
எனவே அந்த கூட்டத்தில் அவரை கலந்து கொள்ளாமல் தடுப்பதற்காகத்தான் இந்த கைது இடம்பெற்றது என்று இன்னும் ஒரு கேள்வி எழுப்பப்டுகின்றது. வெள்ளிக்கிழமை கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் கூட்டத்தில் அர்ச்சுனா கலந்துகொண்டால் ஏதாவது முரண்பாடுகள் வாய் தர்க்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்பதனால் எனவே அதை தடுக்கும் விதமாக இந்த கைது இடம் பெற்றிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்படுகின்றது.
எனவே இன்று கைது செய்யப்பட்டது ஏதோ ஒரு உள்நோக்கத்தின் அடிப்படையில் தான் என மக்கள் கொந்தளிக்கின்றனர். இதேவேளை இன்னுமொரு முக்கியமான விடையம் என்னவெனில் அண்மையில் பாராளுமன்றத்தில் வைத்து இனிமேல் தான், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை எனவும், தான் எதிர்க்கட்சி போலத்தான் செயல்பட போகின்றேன் எனவும் கூறியிருந்தார்.
அத்துடன் யாழ் மாவட்டத்தில் செயல்படுகின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை விமர்சனத்திற்கும் உட்படுத்தியிருந்தார். எனவே இந்த நிலைமையில் கூட குறித்த கைது நடவடிக்கை நடந்திருக்கலாம் எனவும் பலத்த சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதேவேளை அர்ச்சுனாவை பொலிஸார் கைது செய்த முறை கூட பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அண்மையில் மஹிந்த ராஜபக்சவின் மகன் ஜோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரை கை விலங்கு போடாமல் மரியாதையாக அழைத்து சென்றார்கள் ஆனால் இன்றைய தினம் அர்ச்சுனா ராமநாதனை கையில் விலங்கு மாட்டி அவரை வலு கட்டாயமாக அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று கூட பார்க்காமல் மிகப் பெரும் குற்றவாளியை கூட்டிச் செல்வது போல் பொலிஸார் ஜீப்பில் ஏற்றி சென்றார்கள்.
இவை அனைத்தும் மிகப் பெரும் விமர்சனங்களை NPP அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படுகின்றது. இதை தமிழ் மக்கள் இனவாதமாகவே பார்க்கின்றனர்.பெரும்பான்மை இனமான ஜோஷிதாவை மிக மரியாதையாகவும் தமிழ் இனமான அர்ச்சுனாவை விலங்கு மாட்டி பாரிய குற்றச் செயல் கைது போல் அழைத்து சென்றுள்ளனர்.
நாட்டில் உள்ள அனைவரும் ஒரேமாதிரி நடத்தப்படுவார்கள் என தேர்தல் மேடைகளில் வாக்கு சேகரித்த அனுரகுமார இதை எவ்வாறு அனுமதித்தார் என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
NPP அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னது ஒன்று ஆனால் தற்பொழுது நடைமுறையில் நடப்பது ஒன்றாக உள்ளது.
இந்தநிலையில் அரசியல் பழிவாங்கும் செயற்பாடுகளில் அனுராவின் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருவதாக மக்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்