இளையராஜாவின் மறக்கமுடியாத கவலை. மகளை நான் சரியா கவனிக்கவில்லையோ?
பிரபல பாடகி பவதாரிணியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இளையராஜா வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
அதில் பவதாரணியை பற்றி இளையராஜா உருக்கமான தகவலை வெளியிட்டிருக்கிறார். இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி.
இவரும் பின்னணி பாடகி. ஏராளமான பாடல்களை பாடி உள்ளதுடன், இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.இவர் கடந்த வருடம் தன்னுடைய 47வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த ஜனவரி இதேநாள், 25ம்தேதி புற்றுநோய் பாதிப்பால், சிகிச்சை பலனின்றி காலமானார். செல்ல மகள் இறப்புக்கு பிறகு, இளையராஜா அவரின் சமாதிக்கு சென்று வருவதோடு, ஆன்மீகத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "பவதாரணி எங்களை விட்டுப் பிரிந்த பின்புதான், அந்த குழந்தை எவ்வளவு அன்பு மயமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது.
இன்று அவரது நினைவு நாள். கவனமெல்லாம் இசையிலேயே இருந்ததால் என் குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
இப்போது அது எனக்கு வேதனையைத் தருகிறது. அந்த வேதனை தான் மக்களை எல்லாம் ஆறுதல் படுத்தும் இசையாக இருக்கிறது என்பதை நினைக்கும் போது கொஞ்சம் எனக்கும் ஆறுதலாக இருக்கிறது.
என் மகளின் அன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.பவதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 12 அன்று அவரின் திதியும் வர உள்ளது. இதை இரண்டையும் ஒரு நினைவு நாள் நிகழ்வாக நடத்தும் எண்ணம் உள்ளது.
இதில், அனைத்து இசைக்கலைஞர்கள் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த வீடியோவில் இளையராஜா கூறியுள்ளார். பவதாரிணியின் மறைவுக்கு பிறகு, குடும்ப உறுப்பினர்கள் யாருமே பொதுநிகழ்ச்சிகளில் அவ்வளவாக காணப்படுவதில்லை.
கடந்த ஒரு வருட காலமாகவே வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் அடிக்கடி பாவதாரிணியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்நிலையில், மகளை பற்றி இளையராஜா உருக்கமாக பேசியிருப்பது, பலருக்கும் சோகத்தை தந்து வருகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்