இலங்கையில் சுதந்திர தினம் தமிழர்களுக்கு ஒரு கேடா?

#SriLanka #Independence
Mayoorikka
1 year ago
இலங்கையில் சுதந்திர தினம் தமிழர்களுக்கு ஒரு கேடா?

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்தது.

 இலங்கை சுதந்திரம் அடைந்தது என்றால் அப்போதைய இலங்கையில் இருந்த இரண்டு மிகப்பெரிய இனக்குழுக்களுக்குள்ளே பெரும்பான்மை இனக்குழுவான சிங்களவர்களுக்கு மட்டும் ஆங்கிலேயர்கள் அதிகாரங்களை வழங்கி விட்டுச் சென்றமை ஆகும்.

 மிகச் சரியாகச் சொல்லப் போனால் ஆங்கிலேயர்கள் இலங்கைத் தமிழருக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டுப் போன நாள் தான் பெப்ரவரி நான்காம் திகதி. ஆட்சியைப் பகிர்ந்தளிக்காமல் அன்று ஆங்கிலேயர் விட்ட மாபெரும் தவறானது ஈழம் கொழுந்து விட்டு எரிவதற்கு வழி கோலியது.

 அந்தக் கோரத்தின் தொடர்ச்சி தான் ஏறத்தாழ ஆறு இலட்சம் மக்களையும் ஒரு வலுவுள்ள இளைய சந்ததியினையும் கொடூரமாக அழித்து விட்டுச் சென்று விட்டது. நாங்கள் தனி இராச்சியமாக இருந்தோம். எங்களுக்கு என்று தனி நாடு இருந்தது. 

எங்களுக்கு என்று தனிப்படை இருந்தது. அந்தப் படைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்த்து முற்று முழுதாக தமிழ் இராஜ்ஜியத்தையே இல்லாமல் செய்த நாள் தான் 1948 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம், நான்காம் திகதி. இது உண்மையில் எமது சுதந்திர தினம் அல்ல.. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு அடிமைத் தனத்துக்கு வித்திட்ட ஆரம்ப நாள்.


 கி.பி 1505 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரினால் இலங்கையின் கரையோர பிரதேசம் கைப்பற்றப்பட்டது இதனைத்தொடர்ந்து கி.பி 1602 ஒல்லாந்தரின் ஏகாதிபத்தியத்துக்கு இலங்கையர்கள் அடிமைப்பட வேண்டி ஏற்பட்டதுடன், கி.பி 1766 ஆம் ஆண்டளவில் பிரித்தானியரின் ஆக்கிரமிப்பின் காரணமாக கந்த உடரட்ட சிங்களவர்கள் என்று அழைக்கப்படும் மலைநாட்டு சிங்கள மக்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் வாழ்ந்த இலங்கை மக்களும் மீண்டும் அடிமை நிர்வாகத்திற்கு உட்பட வேண்டி ஏற்பட்டது.

 இலங்கையர்களின் சுதந்திரப் போராட்டம் இங்கிருந்தே ஆரம்பமாகின்றது என்று கூறலாம். 1818 ஆம் ஆண்டு உடரட்ட என்ற மலையக பெருங்கலகம், 1823 ஆம் ஆண்டு கொஸ்வத்தை கிளர்ச்சி, 1826ஆம் ஆண்டு பிம்தென்னே கிளர்ச்சி, 1835 ஆம் ஆண்டு மல்வத்து விகாரையின் கிளர்ச்சி, 1848ஆம் ஆண்டு மாத்தளை பெருங்கிளர்ச்சி முதலான கிளர்ச்சிகள் ஆரம்பமானவை நாட்டு மக்கள் இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயாகும்.

 அதன் பின்னர் 1815 ஆம் ஆண்டில் முழு நாடும் பிரிட்டனின் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்த யுகம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முடிவிற்கு வந்தது. காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்துக்கு கைமாற்றும் சதியே நமது சுதந்திர நாள். 

ஆட்சியையும், அதிகாரங்களையும், பொறுப்புகளையும் தமிழர்களிடமிருந்து பறித்து சிங்களவர்களிடம் ஒப்படைத்த நாள் இது. “சுதந்திரம்” என்பதை விட தமிழர்களுக்கு அது ஆங்கிலேயர்களும், சிங்களவர்களும் சேர்ந்து செய்த “தந்திரம்” மட்டுமே. சுதந்திர நாள் என்பது தமிழர்களுக்கு ஒரு கரி நாள். 

 ஆனால் தமிழர்களுக்கு அன்றிலிருந்து இன்றுவரை இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. என்றைக்கு வாளேந்திய சிங்கக் கொடி வானில் சுதந்திரமாகப் பறக்கத் தொடங்கியதோ, அன்றையிலிருந்தே, இதே வாளேந்திய சிங்கக் கொடியின் பின்னணியில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டே வந்தனர்.

 கொடியை ஏந்தியபடியே முப்படையினரும் தமிழர்கள் மீது செய்த கொலைகள் இந்தக் கொடியைப் பார்த்தவுடனேயே வந்து போகின்றன.

 ஒவ்வொரு வருடமும் இந்த நாள் கொழும்பில் பாதைகள் மூடப்பட்டு, ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டு, அணிவகுப்பு நடத்தப்பட்டுத்தான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையிலேயே மக்கள் சுதந்திரத்தை உணர்கிறார்களா?

 இலங்கையின் ஒருபுறத்தில் பெரும்பான்மையின மக்கள் சுதந்திர தினத்தினைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்..ஆனால் மறுபுறத்தில் சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். 

 இனிமேல் மனித பண்புகளுடன், சக தமிழினத்தின் உரிமைகளை மதித்து, இந்நாட்டுக்கு வெள்ளையர்களிடமிருந்து கிடைத்த சுதந்திரம் பரவலாக்கப்படும் எனப் பார்த்தால், நிலைமை முன்யுகத்தைவிட மோசமாகிக்கொண்டிருக்கின்றது. 

தன் நாட்டின் சுதந்திரத்தைக் கொண்டாடும் பெரும்பான்மையினரும், அவர்களை அடையாளப்படுத்தும் இராணுவமும், தமிழர்களின் நிலத்தை அபகரித்து வைத்துக்கொண்டிருக்கிறது. இவ்வேளையிலும் அதனை மீட்பதற்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 

இராணுவம் நிலத்தை விட்டு வெளியேற முடியாதபடி வேலியிட்டு நிற்கிறது. தமிழர்கள் இந்நாட்டின் சொந்தக் குடிகள், ஆனால் இன்றுவரை சொந்த நாட்டில் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றார்கள். யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள் தரப்பிலும் சுதந்திர தினத்தில் தம்மையும் இணைத்து அனுஷ்டிக்கும் போக்கு ஆங்காங்கு காண முடிகிற போதும். 

உணர்வுபூர்வமான பங்களிப்பாக அது இல்லை என்பதே நிதர்சனம். அகதிகளாகவும், அனாதரவாகவும், குடும்பங்கள், சொத்துக்கள் இழந்தவர்களாகவும், அரசியல் உரிமைகளையும் அடிப்படை உரிமைகளை பரிகொடுத்தவர்களாகவும் இருக்கும் ஒரு சமூகத்துக்கு சுதந்திரம் ஒரு கேடா என்கிற நிலை. 

சமத்துவமும், சக வாழ்வும், சமவுரிமையும் சகல மக்களுக்கும் கிடைக்கக் கூடிய நாளே இலங்கைக்கு உண்மையான சுதந்திர நாள். 

தற்போது உள்ள ஆசாங்கத்திலாவது இவை தமிழர்களுக்கு கிடைத்தால் ஒழிய இல்லையேல் சுதந்திரதினம் தமிழர்களுக்கு ஒரு கரி நாள் தான்.

இந்த செய்தியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4