பழம்பெரும் நடிகை புஷ்பலதா மாரடைப்பால் மரணம்
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை புஷ்பலதா. இவர் 1960, 70 மற்றும் 80-களில் ஏராளமான படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
சென்னை தியாகராய நகர் திருமலைப்பிள்ளை சாலையில் வசித்து வந்த புஷ்பலதாவுக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு பிரச்சனைகள் ஏற்பட்டன. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் புஷ்பலதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
புஷ்பலதா உடல் சென்னை தியாகராய நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி சடங்குகள் முடிந்த பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. புஷ்பலதாவின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம் ஆகும்.
இவர் 1961ல் வெளியான 'கொங்கு நாட்டு தங்கம்' படம்மூலம் நடிகையாக அறிமுகமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து இருக்கிறார்.
குறிப்பாக எம்.ஜி.ஆருடன் எங்கள் தங்கம், உரிமைக்குரல், நீதிக்கு தலைவணங்கு, நவரத்தினம் உள்ளிட்ட படங்களிலும், சிவாஜி கணேசனுடன் பார்மகளே பார், ஆலயமணி, ரத்த திலகம், பச்சை விளக்கு, ஆண்டவன் கட்டளை, கை கொடுத்த தெய்வம், வசந்த மாளிகை, ராஜராஜசோழன், ராஜபார்ட் ரங்கதுரை, பட்டாக்கத்தி பைரவன், எமனுக்கு எமன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்தின் ஆயிரம் ஜென்மங்கள், தர்மயுத்தம், நான் அடிமையில்லை, கமல்ஹாசனுடன் கல்யாணராமன், சகலகலா வல்லவன், சட்டம் என் கையில் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார்.
மேலும் நல்வரவு, ராமு, தாயே உனக்காக, நானும் ஒரு பெண், கற்பூரம், ஜீவனாம்சம், பணமா பாசமா, தீர்க்க சுமங்கலி, திருமலை தெய்வம், சிட்டுக்குருவி, பகலில் ஒரு இரவு, ரத்தபாசம் போன்ற படங்களிலும் புஷ்பலதா நடித்த கதாபாத்திரங்கள் வரவேற்பை பெற்றன.
1963ல் மெயின் பி லட்கி ஹூஉன் என்ற இந்தி படத்திலும், நர்ஸ் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்