மொட்டிலிருந்தே அடுத்த ஜனாதிபதி: நாமல் அறைகூவல்

அடுத்த அரசாங்கத்தை உருவாக்க வல்ல பரம்பரையை அணிதிரட்ட ஒன்றிணையுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
"ஏமாற்றத்தை பொறுத்தது போதும் இனி அதிலிருந்து எழுவோம்" எனும் தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் நேற்றையதினம்(01) மாலை நுகேகொடையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உழைக்கும் வர்க்கத்தினர் மீது எமக்கு அளப்பெரிய அம்பிக்கை உள்ளது. அவர்களின் ஊடாகவே இந்த நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச்செல்ல எம்முடைய அரசாங்கத்தின் ஆட்சியில் கொண்டு செல்ல முடிந்தது. எம்முடைய நாட்டில் உற்பத்தி செய்ய கூடிய அனைத்தையும் எம்முடைய நாட்டிலேயே உற்பத்தி செய்து உலக சந்தையில் போட்டியாளர்களாகவேண்டும் என்பதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நோக்கமாக அமைந்தது. அதன் முதற்கட்டமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து நாட்டில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டார்.ஆனால் அவற்றை தற்போதைய ஆளும் தரப்பினர் ஊழல் செய்ததாக விமர்சித்தனர்.
குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். பொய்யுரைத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கமாக அநுர அரசாங்கம் மாறியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தினரின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அவர்களை மறந்துள்ளது.
அதேபோன்று அவர்களின் தொழிற்பாதுகாப்பை உறுதிப்படுத்த மறந்து அவர்களை கைவிட்டுள்ளது. அதேபோன்று வரிகளை அதிகரித்துள்ளனர்.இதன் காரணமாக உழைக்கும் வர்க்கத்தினர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே எம்முடைய கட்சி உழைத்தது. நாம் பௌத்தர்கள் மாறாக இனவாதிகள் அல்ல. எம்முடைய கட்சி அனைத்து மதங்களின் உரிமையையும் பாதுகாக்கும் கட்சியாகும்.
இளைஞர் யுவதிகளின் புதிய பரம்பரைக்கு ஏற்ற அரசியலை உருவாக்க நாம் தயார். எம்மை அரசாங்கம் அதிகம் தாக்குகின்றது. அதற்கு காரணம் எம்மை பார்த்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அஞ்சுகின்றது. காரணம் நாம் கொள்கை அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்து செல்கின்றோம்.
பல வாக்குதிகளை மக்களுக்கு வழங்கிய அரசாங்கம் அவற்றை நிறைவேற்றுவதாக தெரியவில்லை . மின்கட்டணத்தை தேர்தலுக்கு பின்னர் கூட்டவுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றவேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றோம்.
அடுத்த அரசாங்கத்தை உருவாக்க வல்ல பரம்பரையை அணிதிரட்ட ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். எம்முடைய கட்சி நாட்டை சேதப்படுத்தும் கட்சி அல்ல. மாறாக பயங்கரவாத்தை நிறைவுக்கு கொண்டு வந்து ஆசியாவில் விரைவாக அபிவிருத்தி அடையும் நாடாக ஆக்கிய கட்சியே எம்முடைய கட்சி .
அடுத்த ஜனாதிபதி எம்முடைய கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார்கள் என தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



