வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நாளை (06) காலை 7 மணிக்கு தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டாலும், பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வாக்காளருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள் குறித்தும் தேர்தல் ஆணையாளர் நாயகம் விளக்கமளித்துள்ளார். வாக்காளர்கள் ஆட்பதிவுத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் விநியோகிக்கப்படும் அடையாள அட்டைக்கான புகைப்படத்துடனான தற்காலிக ஆவணங்கள் போதுமானது.
மேலும் மேற்கூறப்பட்ட ஆவணங்கள் இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 75,589 ஆகும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று தொடங்கும் அமைதி காலத்தில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 3,000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த பெபரல் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



