மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பல தொழிற்சாலைகள் மூடப்படும்! எதிர்க்கட்சி கடும் விசனம்

பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதை விடுத்து உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் மீண்டும் பாரியதொரு மின் கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று பல மாதங்களுக்கு முன்னரே நாம் தெரிவித்திருந்தோம்.
மின் சக்தி அமைச்சர் உட்பட முழு அரசாங்கமும் அதனை மறுத்தது. ஆனால் கடந்த வாரம் 18.3 சதவீதத்தினால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை மின்சாரசபையால் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நெக்ஸ் ஆடை தொழிற்சாலை மூடப்பட்டது. இந்நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் இதேபோன்று இன்னும் எத்தனை தொழிற்சாலைகள் மூடப்படும்? விரைவில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த சவால்களுக்கு அரசாங்க தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.
தற்போது சகல அமைச்சுக்களிலும் அரச சேவைகள் சீர்குலைந்துள்ளன. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு சார் ஊழியர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காமல் உள்ளுராட்சிமன்றங்களில் எவ்வாறு பலவந்தமாக ஆட்சியமைப்பது என்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.
யார் எதைக் கூறினாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் மேயருடன் கொழும்பில் நாம் ஆட்சியமைப்போம். நாம் எமது உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பித்துவிட்டோம் என்றார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



