தலைநகரம் உட்பட தென்னிலங்கையில் கடும் மழை! பல இடங்களில் வீடுகள் சேதம்

#SriLanka #Colombo #weather #Rain #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
1 year ago
தலைநகரம் உட்பட தென்னிலங்கையில் கடும் மழை!   பல இடங்களில் வீடுகள் சேதம்

இலங்கையில் கடும் காற்றுடனான வானிலை காரணமாக தலைநகர் கொழும்பு உள்பட பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகள் சேதமடைந்தன.

 மோசமான வானிலை நீடிப்பதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. ரயில் சேவையும் பல இடங்களில் தடைபட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஓரிரு தினங்களாகவே பல்வேறு பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காற்று வீசி வருகின்றது. 

இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் வீசிய கடும் காற்று காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு கடும் காற்றுடனான வானிலை நிலவியிருந்தது. 

கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதி முதல் வெள்ளவத்தை பகுதி வரையான கரையோர பகுதிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வீசிய கடும் காற்றுடனான வானிலை கரணமாக மரங்கள் முறிந்து வீழந்திருந்ததுடன், பல கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் வீசிய கடும் காற்றுடனான வானிலை காரணமாக பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

 இந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். மரம் முறிந்து வீழ்ந்தமையினால் எவருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. கொழும்பு - தெமட்டகொடை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மதில் சுவரொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. நேற்றிரவு பெய்த கடும் மழையுடன் கூடிய கடும் காற்று காரணமாகவே இந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 கண்டி பகுதியிலுள்ள வீடொன்றின் மீது தொலைத்தொடர்பு கோபுரமொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த வீட்டில் வசித்து வந்த தாய் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. அவிசாவளை - தெரணியகலை பகுதியில் மரமொன்று வீடொன்றின் மீது முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் காயமடைந்த மூவரும் தெரணியகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் கவலைக்கிடமான நிலையிலிருந்த சிறுமியொருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். புத்தளம் - ஆனைமடு பகுதியில் போலீஸ் நிலையத்தின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, போலீஸ் நிலையத்தின் கட்டடத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

 சுமார் 50 வருடம் பழைமையான மரமொன்றே இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் கடும் காற்றுடனான வானிலை காரணமாக, ரயில் மார்க்கங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. இதனால், பல ரயில் மார்க்கங்களின் ஊடாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புத்தளம் ரயில் மார்க்கத்தின் ஊடாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

 வதுரவ மற்றும் கீனவல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்து, அந்த ரயில் மார்க்கத்தின் ஊடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மரம் முறிந்து வீழந்தமையினால், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் வீசி வரும் கடும் காற்றுடனான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

 கடும் காற்றுடனான வானிலை காரணமாக மின்சார கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதை அடுத்தே இவ்வாறு மின்சாரம் தடைபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. தடைபட்டுள்ள மின்சாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை குறிப்பிடுகின்றது.

 மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்றைய தினம் இடைக்கிடை கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. மேல், சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் 100 மில்லிமீட்டருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது. வடமத்திய மாகாணம், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்றைய தினம் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகமானது, 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தை அடுத்து, பொதுமக்களை அவதானித்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1748040119.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4