இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

#Astrology #Rasipalan #Weekly-Rasipalan #Lanka4
Prasu
16 hours ago
இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

மேஷம்

இந்த வாரம் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். பயணங்கள் அனுகூலம் தரும். பாக்கிய ஸ்தான கிரகச் சேர்க்கையால் சிலருக்கு நீண்ட தூரப் பயணம் ஏற்படலாம்.

குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையின் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். 

நிதிநிலை சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்ய இது உகந்த நேரம். அலுவலகத்தில் பணிச்சுமை குறைந்தாலும், புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். 

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பங்குச்சந்தை முதலீடுகள் லாபம் தரும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். போதுமான தண்ணீர் பருகவும். 

துர்க்கை அம்மனுக்குக் குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவது, சர்ப்ப வழிபாடு செய்வதால் தடைகள் நீங்கி அதிர்ஷ்டம் அதிகரிக்கும். 

ரிஷபம்

சகிப்புத்தன்மையுடன் செயல்பட வேண்டிய வாரம். நிதானமாக முடிவெடுங்கள். வார இறுதியில் மன நிம்மதி கூடும். அஷ்டம ஸ்தான கிரகச் சேர்க்கையால், மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிப்பதில் நிதானம் தேவை. 

தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் வர வாய்ப்புள்ளதால், செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. 

தொழிலில் புதிய போட்டியாளர்கள் உருவாகலாம். கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கலில் தெளிவு அவசியம். பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க சேமிப்பில் கவனம் செலுத்தவும்.

அலர்ஜி, தும்மல் போன்ற தொல்லைகள் வரலாம். தூசி நிறைந்த இடங்களை தவிர்க்கவும். மகாலட்சுமிக்கு மரிக்கொழுந்து சாற்றி வழிபடவும். பீரோவில் வெள்ளி நாணயம் வைப்பது செல்வ வளத்தை நிலைப்படுத்தும். 

மிதுனம் 

உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் தரும். களத்திர ஸ்தான கிரகச் சேர்க்கையால், இல்லத்துணையிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

குடும்பத்தில் சுப காரிய பேச்சுக்கள் தொடங்கும். உறவினர் வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். காதல் உறவுகள் இனிக்கும். பழைய கடன்கள் வசூலாகும், நிதிநிலை உயரும். 

எழுத்து, கலைத் துறையினருக்கு இது பொற்காலம். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். குரு வக்ரம் பெற்றிருப்பதால் பெரிய முடிவுகளில் நிதானம் தேவை. 

சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். நடைப்பயிற்சி ஆரோக்கியத்திற்கு அவசியம். பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி வழிபடவும். அதனால் திருமண உறவில், குடும்ப உறவில் உள்ள சிக்கல்கள் நீங்கும். 

கடகம் 

மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வீட்டைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவீர்கள். 

6ம் இட கிரகச் சேர்க்கையால், எதிர்ப்புகளைச் சமாளிக்கும் திறமை கூடும். தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். 

விருந்தினர்கள் வருகை உண்டு. எதிர்பாராத பண வரவு உண்டாகும். கடன் சுமை குறையும். உத்யோகஸ்தர்களுக்கு நிலுவையில் இருந்த பணிகள் முடியும். 

சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் லாபகரமாக அமையும். ஆதாயம் தரும் வாரம். செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். 

உணவுக் கட்டுப்பாடு, ஆரோக்கியமான உணவு முறை அவசியம். சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்வது, பசுவிற்கு அகத்திக்கீரை அளிப்பது நன்மை தரும்.

சிம்மம் 

தைரியமும், தன்னம்பிக்கையும் உச்சத்தில் இருக்கும். சமூகத்தில் கௌரவ பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் தடையின்றி முடியும். 5ம் இட கிரகச் சேர்க்கை காரணமாக புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

தந்தை வழி உறவுகள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற அதிகச் செலவுகள் செய்ய நேரிடலாம். 

நீண்ட காலச் சேமிப்புத் திட்டங்களைத் தொடங்குவீர்கள். நிர்வாகத் துறையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். 

புதிய முதலீடுகளில் மட்டும் கூடுதல் கவனம், எச்சரிக்கை தேவை. கண்களில் எரிச்சல், பார்வை தொடர்பான சிக்கல்கள் வரலாம்.

ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது, காதில் கேட்பது அதிர்ஷ்டத்தை அதிகரித்து, சமூக அந்தஸ்தை மேம்படுத்தும். 

கன்னி

எதையும் ஆராய்ந்து செயல்படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் மூலம் லாபம் உண்டு. புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். 

சுக ஸ்தான கிரகச் சேர்க்கையால் வீடு, வாகனச் சேர்க்கை கைகூடும். உறவினர்களிடையே நிலவிய பகை மாறும். பழைய நண்பர்களுடன் உரையாடி மகிழ்வீர்கள். 

குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகளுக்குப் பெரும் மதிப்பு கிடைக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்து லாபத்தை அதிகரிப்பீர்கள். 

தரகு மற்றும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்குப் பெரிய வாய்ப்புகள் வரும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். தோள்பட்டை, முதுகு வலி வரலாம். 

வேலை செய்யும் போது சரியான நிலையில் அமர்வது அவசியம். முருகனுக்குப் பச்சை வஸ்திரம் சாற்றி வழிபடுவது, ஹயக்ரீவர் துதி உச்சரிப்பது ஆகியவை மனத்தெளிவைத் தரும்.

துலாம்

ஆடம்பரச் செலவுகள் கூடும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தைரிய ஸ்தானத்தில் கிரகச் சேர்க்கை இருப்பதால், திடீர் பயணங்கள் உண்டு. 

வாகனப் பயணங்களில் நிதானம் தேவை. திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும். வாழ்க்கைத் துணையின் மூலம் நிதி ஆதாயம் உண்டு. 

சுப நிகழ்ச்சிகளில் முதன்மைப் பங்கு வகிப்பீர்கள். சேமிப்புத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். 

கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கூடும். உங்கள் பேச்சுத் திறமையால் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். சிறுநீரகம், அடிவயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். 

தண்ணீர் அதிகம் அருந்தவும். அம்பிகைக்குச் சர்க்கரைப் பொங்கல் படையல், கோவிலுக்கு வாசனைப் பொருள் தானம் சௌபாக்கியம் தரும். 

விருச்சிகம்

விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். தன ஸ்தானத்தில் கிரகச் சேர்க்கை இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். 

வார்த்தைகளில் நிதானம் மிகவும் அவசியம். சகோதரர்களிடையே அன்பு பலப்படும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேலோங்கும். புதிய நபர்களிடம் குடும்ப ரகசியங்களைப் பேச வேண்டாம். 

பணப்புழக்கம் சீராக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறையினருக்கு அபரிமிதமான வளர்ச்சி உண்டு. 

வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்குக் கூடி வரும். ரத்த அழுத்தம், தலைவலி வரலாம். தியானம், மூச்சுப்பயிற்சி செய்யவும். விநாயகருக்குத் தோப்புக்கரணம் போட்டு வழிபடவும். ஏழைகளுக்குச் சிவந்த நிறப் பழங்களை தானமாக வழங்குவது நலம் தரும். 

தனுசு

ராசிநாதன் குருவின் அருளால் தடைகள் விலகும். மற்றவர்களுக்கு உதவி செய்து பாராட்டு பெறுவீர்கள். ஜன்ம ராசியில் கிரகச் சேர்க்கை இருப்பதால், முக்கிய முடிவுகளில் பெரியவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. 

 குடும்பத்தில் சுபச் செய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் ஆசி கிட்டும். நிதிநிலை மிகச் சிறப்பாக இருக்கும். வங்கிச் சேமிப்பு உயரும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். 

வேலையில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்குப் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். 

நிர்வாக ரீதியான சிக்கல்கள் தீரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தட்சிணாமூர்த்திக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, வழிபட மனத்தெளிவும், சரியான முடிவெடுக்கும் ஆற்றலையும் கிட்டும். 

மகரம்

வேகமும் விவேகமும் கூடும் வாரம். இழந்த வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விரய ஸ்தானத்தில் கிரகச் சேர்க்கை இருப்பதால், சுப செலவுகள், மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பிரிந்திருந்த உறவினர்கள் தேடி வருவார்கள். குடும்பத்தில் நிலவிய கசப்புணர்வுகள் நீங்கி அமைதி நிலவும். 

பணப்புழக்கம் சீராக இருந்தாலும் செலவுகளில் கட்டுப்பாடு தேவை. இரும்பு, இயந்திரம், நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்களுக்குப் பெரும் லாபம் உண்டு. 

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க உகந்த காலம். மூட்டு வலி, கால் வலி படிப்படியாகக் குறையும். 

ஆரோக்கியம் மேம்படும். அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடவும். ஏழைகளுக்கு எள் சாதம் தானம் செய்வது தேவையற்ற விரயச் செலவுகளைக் குறைக்கும். 

கும்பம் 

ராசியில் உள்ள ராகுவுக்கு குரு பார்வை இருப்பதால் பொறுப்புகள் கூடும். துணிச்சலாகச் செயல்பட்டு மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ்வீர்கள். 

லாப ஸ்தான கிரகச் சேர்க்கையால் நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. சமூக சேவையில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்கள் வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். 

பழைய கடன்கள் அடையும். இல்லத்துணையுடன் கருத்து வேறுபாடு வராமல் பொறுமை கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் மெதுவான, நிலையான லாபம் உண்டு. 

உத்தியோகத்தில் உழைப்பு அங்கீகரிக்கப்படும். தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்த்தால் திட்டமிட்ட வேலைகளைச் சரியாக முடிக்கலாம். 

வாயுப் பிடிப்பு, செரிமானக் கோளாறு வரலாம். சீரான உணவு முறை அவசியம். காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். உங்கள் கீழ் பணிபுரியும் வேலையாட்களுக்கு உதவுவது லாபத்தைத் தக்க வைக்க உதவும். 

மீனம் 

ஞானமும் பக்தியும் அதிகரிக்கும். பிறருக்கு வழிகாட்டும் இடத்தில் இருப்பீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். கர்ம ஸ்தான கிரகச் சேர்க்கையால் தொழில் வெற்றி, பணிச்சுமை உண்டு. 

வீட்டில் விசேஷங்கள் களைகட்டும். பிள்ளைகளின் சாதனைகள் உங்களைப் பெருமைப்படுத்தும். உறவினர்கள் மத்தியில் நன்மதிப்பு கூடும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். 

புதிய முதலீடுகள் லாபம் தரும். கல்வி, ஆலோசனை மற்றும் ஆன்மீகப் பணியில் இருப்பவர்களுக்கு உயர்வு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். 

வியாபாரிகள் புதிய கிளைகள் தொடங்க வாய்ப்புள்ளது. ஆழ்ந்த உறக்கம் தேவை. கண் தொடர்பான உபாதைகள் வரலாம். 

மகான்கள் வழிபாடு நல்லது. சிவபெருமானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்வது தொழில் தடைகளை நீக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!