'டித்வா' புயல் பாதிப்பு தொடர்பான ஆய்வு - IMF குழுவின் இலங்கை விஜயம் நிறைவு!
'டித்வா' புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் இலங்கை வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு தனது விஜயத்தை நிறைவு செய்துள்ளது.
இக்குழுவினர் கடந்த ஜனவரி 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். இவ்விஜயத்தின் போது IMF குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி.
நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட அரசாங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், இந்த IMF குழுவினர் அரச நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பல தரப்பினருடன் 'டித்வா' புயலால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூகத் தாக்கங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த எவன் பபஜார்ஜியோ, இந்த விஜயத்தின் போது உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், இயற்கை அனர்த்தங்களுக்காக அரச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் நிதிசார் நடவடிக்கைகள், நாணயக் கொள்கை மற்றும் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை ஆகியவை குறித்து விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், அதிகாரிகளின் எதிர்காலக் கொள்கை நோக்கங்கள், நிதித் தேவைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு IMF இனால் வழங்கக்கூடிய உதவிகள் குறித்த தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் அதேவேளை, நிதி மற்றும் கடன் ஸ்திரத்தன்மையில் எட்டப்பட்ட முன்னேற்றத்தைப் பாதுகாத்தல், அரசமுதலீட்டு முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல், திட்டங்களுக்கான முன்னுரிமைகளை மறுசீரமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல், அத்துடன் சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னலை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பபஜார்ஜியோ மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மறுஆய்வுக்காக, பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கக் கூடிய விரைவில் IMF குழுவொன்றை மீண்டும் நாட்டிற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.
பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், தாங்கும் திறன் மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இலங்கையுடனான ஒத்துழைப்பையும், நாட்டிற்கு உதவுவதற்கான தயார் நிலையையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாக IMF தெரிவித்துள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்