இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)
மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் நற்பலன்களை வாரி வழங்கக் கூடியதாக அமைகிறது. வாரத் துவக்கத்திலேயே தடைப்பட்ட காரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும் நற்செய்தி வந்து சேரும்.
சமூகத்தில் தனி அங்கீகாரம் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள், சமூக வட்டாரத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும்.
பெரிய மனிதர்களின் அறிமுகமும், புதிய பொறுப்புகளும் கிடைக்கும். பித்த சம்பந்தமான சிக்கல்களை தவிர்க்க காரமான உணவுகளைத் தவிர்ப்பது நலம்.
தினசரி சூரிய நமஸ்காரம் செய்வதும், சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்து, அதை தீர்த்தமாக பருகுவது நலம் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு செல்வமும், செல்வாக்கும் உயரும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய திட்டங்களைச் செயல்படுத்தலாம். நெடுநாட்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து உங்கள் இல்லத்தை மகிழ்விக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்களிடையே நிலவி வந்த மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை பலப்படும். சமூகத் தொடர்புகள் விரிவடையும்.
அதிகாரத்தில் உள்ளவர்களின் நட்பு உங்கள் வணிக வளர்ச்சிக்கு வித்திடும் கண், தொண்டை தொடர்பான தொந்தரவுகள் ஏற்படலாம்.
தூய நீரைப் பருகுவதும், ஓய்வும் அவசியம். அருகில் உள்ள அம்பிகை கோவிலில் ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் வருகின்ற சிக்கல்கள் விலகும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு அறிவுப்பூர்வமான செயல்பாடுகளால் அரிய சாதனைகளைச் செய்யும் பொற்காலம். வாரத்தின் முற்பகுதியில் மனதிற்கு இனிய செய்திகள், இல்லம் தேடி வந்து சேரும்.
பேச்சாற்றலால் அனைவரின் பாராட்டை பெறுவீர்கள். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்களின் ஆதரவு பக்கபலமாக இருக்கும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குத் புதிய பதவிகள் தேடி வரும். நரம்புத் தளர்ச்சி, அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம்.
உடற்பயிற்சி செய்வதும், சத்தான உணவு உட்கொள்வதும், குல தெய்வத்திற்கு பாலபிஷேகம் செய்வதும், பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குவதும் நலம் தரும்.
கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு மனமகிழ்ச்சியும், காரிய சித்தியும் உண்டாகும். விடாப்படியான உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் சமூகத்தில் கிடைப்பதோடு, தனிப்பட்ட சாதனைகள் மூலம் குடும்பத்திற்குப் பெருமை தேடித்தருவீர்கள்.
சுற்றத்தாருடன் இணக்கமான சூழல் நிலவும். நண்பர்கள் தேடி வந்து பேசுவர். அரசியல் சந்திப்புகள் எதிர்காலத் திட்டங்களுக்குப் உதவியாக இருக்கும்.
நிதி நிலையில் அபரிமிதமான வளர்ச்சி காணப்படும். சேமிப்புகள் உயரும். சளி மற்றும் நுரையீரல் தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டு விலகும்.
தினமும் காலை அல்லது மாலையில் நடை பயிற்சி செய்வதும், சிவபெருமானை பிரார்த்தனை செய்து பூஜை, தியானம் செய்வதும் சிக்கல்களை நீக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு ஆளுமைத் திறனும், புகழும் மேலோங்கும். எடுத்த காரியங்களைச் செவ்வனே முடித்துச் சாதனை படைப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் தடையின்றி வந்து சேரும்.
குடும்ப பெரியோர்களின் ஆசீர்வாதம் கிட்டும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். அரசியல், சமூகத் துறையினருக்குப் புகழும், கௌரவமும் கிடைக்கப் பெற்று மக்கள் செல்வாக்கு பெருகும்.
எலும்பு, முதுகு வலி தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். அதிகாலை சூரிய ஒளியில் உடற்பயிற்சிகள் செய்வதாலும், ஏழை எளியவர்களுக்கு கோதுமை தின்பண்டங்கள் தானமாக வழங்குவதாலும் நன்மைகள் உயரும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வாரம். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சொத்து விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும்.
கலைத் துறையினர் சாதனை நிகழ்த்துவார்கள். குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். உறவினர்களிடையே மதிப்பு கூடும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும்.
ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோல் சம்பந்தமான ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும்.
தூய்மை பணியாளர்களுக்கு பொருள் உதவி, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் தானம், திருநங்கைகளிடம் ஆசி பெறுவதும் நலம்பல தரும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு வசதி வாய்ப்புகளும், சுகபோகங்களும் பெருகும். ஆபரணச் சேர்க்கை, வாகன யோகம் உண்டாகும். தனிப்பட்ட திறமைகள் வெளிப்பட்டுப் பலரது கவனத்தை ஈர்க்கும்.
இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்கள் சந்திப்புகள் உற்சாகம் தரும். அரசியல் ரீதியான தொடர்புகள் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.
சமூக வலைதளங்களில் உங்கள் செல்வாக்கு உயரும். சிறுநீரகம், முதுகு தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும்.
துர்க்கை, காளிக்கு தினமும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், மனைவி, மனைவிவழி உறவினர்களுக்கு பரிசுகள் வழங்குவதாலும் நலம் பெருகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் வைராக்கியத்துடன் செயல்பட்டு வெற்றிகளைப் பறிக்கும் வாரம். எதிர்ப்புகள் விலகிப் பாதைகள் சீராகும். உங்கள் மனதிடம் கண்டு மற்றவர்கள் வியக்கும் வண்ணம் புதிய சாதனைகளைச் செய்வீர்கள்.
உடன் பிறந்தவர்களின் ஆதரவு உள்ளத்துக்கு பலம் சேர்க்கும். அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படும். அதன் மூலம் பலருக்கும் தேவையான காரியங்களைச் சாதிப்பீர்கள்.
அலைச்சல் காரணமாக தலைவலி, உடல்வலி ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். இயன்றவரை ஏழை மக்களுக்கு புளி சாதம் தானமாக தருவதாலும், சரியான நேரத்திற்கு உறங்க செல்வதாலும் பல சிக்கல்கள் விலகும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு குரு பகவான் பார்வையால் இவ்வாரம் பொற்காலமாக அமையும். வழிபாடுகளும், ஆன்மீகப் பயணங்களும் மன அமைதி தரும்.
குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த சுபச் செய்திகள் வந்து சேரும். குடும்ப பெரியோர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் கிட்டும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகளும் கௌரவமும் தேடி வரும்.
சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நிதிநிலை சீராகும். கை கால் வலி, இடுப்பு வலி ஆகிய உபாதைகள் ஏற்பட்டு சிகிச்சையால் விலகும்.
தினமும் மஞ்சள் நிற ஆடை அணிவதும், நெற்றியில் சந்தன திலகம் இடுவதும், பெரியோர்களை வணங்கி ஆசி பெறுவதும் நலம் பல தரும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு கடின உழைப்பிற்குப் பின் கனிவான பலன்கள் கிடைக்கும் வாரம். பொறுமையுடன் செயல்பட்டுச் சிக்கலான காரியங்களை முடிப்பீர்கள்.
பழைய கடன்கள் வசூலாகி மனச் சுமை குறையும். குடும்பப் பொறுப்புகள் அதிகரித்தாலும் அதனைச் சிறப்பாகக் கையாளுவீர்கள். அரசியல் ரீதியான, பொதுவாழ்வில் உள்ள ரகசியங்களைப் பாதுகாப்பது அவசியம்.
சமூகத் தொடர்புகளில் நிதானம் தேவை. கை கால் வலி மற்றும் உடல் அசதி ஏற்பட்டு விலகும். சத்தான உணவுகளை உண்பது அவசியம்.
வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலில் தினமும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது, அதிகாலை நடைபயிற்சி நலம் தரும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு சிந்தனையில் தெளிவும், செயலில் வேகமும் ஏற்படும். எதிர்பாராத தனலாபமும், பூர்வீகச் சொத்துக்கள் மூலம் வருமானமும் வந்து சேரும்.
உங்களின் சமூக அந்தஸ்து ஒரு படி உயரும் வாரமிது. கணவன்-மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரித்து இல்லறம் இனிக்கும், அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு பெருகிப் புதிய அங்கீகாரம் கிடைக்கும்.
மனக்கவலை விலகும். நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மைப் பிரச்சனை வரக்கூடும். ஏழைகளுக்கு எள் கலந்த சாதம் தானம் செய்வதும், அனாதைகள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பொருள் உதவி, ஆடை தானம் செய்வதும் நலம் தரும்.
மீனம்
மீன ராசி அன்பர்களுக்கு குரு, சுக்கிரனின் அனுகூலத்தால் மங்களகரமான பலன்கள் பெருகும். இல்லத்தில் சுபச் செய்திகளும், மங்கல ஓசைகளும் ஒலிக்கும். முயற்சிகள் கைகூடும்.
நிதி நிலைமை சீராகும். அரசு வழி சலுகைகள் கிடைக்கும். உறவினர் விருந்து உபசாரங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் உங்கள் பங்களிப்பு பாராட்டப்படும்.
நண்பர்களிடையே உங்கள் மதிப்பு கூடும். உடலில் நீர் சத்து குறைந்து களைப்பு ஏற்படலாம். தண்ணீர், பழச்சாறு பருகவும். மகான்கள் ஜீவசமாதி தரிசனம் செய்வது, சுமங்கலி பெண்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கி ஆசி பெறுவது ஆகியவற்றால் நன்மைகள் கூடும்.
(வீடியோ இங்கே )