இலங்கை சுற்றுலாத்துறை: பயணிகளின் வருகை அதிகரித்த போதிலும் வருமானம் வீழ்ச்சி!
இவ்வாறு பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்த போதிலும், வருமானம் குறைந்திருப்பதற்கு சுற்றுலாப் பயணி ஒருவரின் சராசரி தினசரி செலவு மதிப்பீடு குறைக்கப்பட்டதே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ஒரு சுற்றுலாப் பயணியின் தினசரி செலவு 171 டொலர்களாகக் கணக்கிடப்பட்ட நிலையில், தற்போது அது 148 டொலர்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகாரசபை இந்த மதிப்பீடுகளைத் திருத்தியுள்ளது.
சுற்றுலாத்துறை இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3 சதவீத பங்களிப்பை வழங்கும் மிக முக்கியமான துறையாகத் தொடர்கிறது.
2026 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். கடந்த ஆண்டில் 2.36 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், 3.22 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டிருந்தது.
இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.6 சதவீத உயர்வாகும். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், தலா ஒருவருக்கான செலவீனம் குறைவாக இருப்பது வெளிநாட்டுச் செலாவணி வருவாயில் இத்துறை வழங்கும் பங்களிப்பைச் சற்று மட்டுப்படுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதுடன், அவர்கள் நாட்டில் செலவிடும் தொகையை உயர்த்துவதற்கான புதிய உத்திகளை முன்னெடுப்பதன் மூலமே நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை அடைய முடியும் எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்