உக்ரைன் போருக்குப் பின் மசகு எண்ணெய் விலை உச்சம் - உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றங்கள்!
உக்ரைன் போர் தொடங்கிய 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையானது தற்போது அதன் உச்சபட்ச நிலையை எட்டியுள்ளது.
ஈரான் மீதான அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க இராணுவம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் விளக்கமளிக்க உள்ளதாக வெளியாகும் செய்திகள், உலகளாவிய ரீதியில் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளன.
ஐரோப்பிய வர்த்தகத்தில் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 126 டொலருக்கும் அதிகமாக, அதாவது சுமார் 7% வரை உயர்ந்தது. எனினும், பின்னர் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் காரணமாக விலை சற்று குறைந்து 116 டொலராக வர்த்தகம் செய்யப்பட்டது.
ஈரான் மீதான போர் பதற்றங்களுக்கு முன்னர் இது சுமார் 70 டொலராகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மசகு எண்ணெய் என்பது வெறும் எரிபொருள் மட்டுமல்ல; அது விமான எரிபொருள், பிளாஸ்டிக், இரசாயனங்கள் மற்றும் விவசாயத்திற்கான உரங்கள் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளாகும்.
இதன் விலை உயர்வு பின்வரும் துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது: உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் யூரியா ஏற்றுமதி முடங்கியுள்ளதால், உலகளவில் விவசாய உற்பத்திக்கான செலவு கடுமையாக அதிகரித்துள்ளது.
கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதால், உணவுப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களின் சில்லறை விலை உயர்ந்துள்ளது. மின்சாரக் கட்டணம், எரிவாயு மற்றும் விமானக் கட்டணங்கள் உயரும் என அரசாங்கங்கள் எச்சரித்துள்ளன.
பணவீக்க அபாயமும் நாடுகளின் நிலையும் சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்த மோதல் உலகப் பொருளாதாரத்தையே திசைதிருப்பும் என எச்சரித்துள்ளது.
பிரேசில்: மிகக் கடுமையான பொருளாதாரப் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்: எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க பாடசாலைகளை மூடுவதற்கு அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் உத்தரவிட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட், "ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பைக் குறைப்பதன் மூலம் நீண்ட காலப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமானால், தற்போது ஏற்பட்டுள்ள இந்த குறுகிய காலப் பொருளாதாரச் சிரமங்களைப் பொறுத்துக் கொள்வதில் நியாயம் இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )