வடக்கு - கிழக்கு அபிவிருத்தியில் கூடுதல் கவனம்: ஜனாதிபதி அனுரவின் விசேட உத்தரவு!

#SriLanka #Development #Lanka4 #President #AnuraKumaraDissanayake #North #East #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
வடக்கு - கிழக்கு அபிவிருத்தியில் கூடுதல் கவனம்: ஜனாதிபதி அனுரவின் விசேட உத்தரவு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தமக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், அதற்கமைவாகத் தமது செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தனர்.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீர் மற்றும் நகர்ப்புற அபிவிருத்திப் பணிப்பாளர் மனோஜ் சர்மா, பணிப்பாளர் சபையின் ஆலோசகர் மொன் வான் டெர் வ்லியட் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பணிமனையின் நகர்ப்புற, நீர் வழங்கல் மற்றும் துப்புரவுக்கான முதன்மைச் செயற்றிட்ட அதிகாரி கமல் தஹநாயக்க ஆகிய உயர்மட்டப் பிரதிநிதிகள், ஆளுநர் செயலகத்தில் நேற்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை கௌரவ ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

இச்சந்திப்பின்போது, தமது நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்த மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், தாளையடியிலிருந்து முன்னெடுக்கப்படும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகத் திட்டம் தொடர்பில் விசேடமாகத் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். 

அத்திட்டத்தினூடாக வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளை வழங்கும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், இணைப்புக் கட்டணங்கள் குறித்தான தமது ஆலோசனைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

வட மாகாணத்தில் உள்ளூர் மட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடம் காணப்படும் துறைசார் நிபுணத்துவம், செயற்றிட்டங்களை முன்னெடுப்பதில் உள்ள அதீத ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரதிநிதிகள் இதன்போது வெகுவாகப் பாராட்டினர். 

குறிப்பாக, மக்களின் உணர்வுகளை அறிந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் கௌரவ ஆளுநரின் தலைமைத்துவத்துக்கும் அவர்கள் தமது விசேட பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

தற்போது முன்னெடுக்கப்படும் நீர் வழங்கல் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளமை குறித்தும், அவற்றின் ஊடாக மக்கள் நேரடியாகப் பயனடைந்து வருகின்றமை குறித்தும் பிரதிநிதிகள் மகிழ்ச்சி வெளியிட்டனர். 

அத்துடன், இதுவரை எட்டப்பட்டுள்ள அபிவிருத்தி அடைவுகள் மற்றும் இனி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து நேரடியாகக் கண்டறிந்து கொண்டதாகவும், இந்தக் களப் பயணத்தின் அனுபவங்கள், தமது தலைமையகத்துக்குத் திரும்பியதும் இப்பகுதிக்கான புதிய திட்டங்களை மதிப்பிடுவதற்கும் அங்கீகரிப்பதற்கும் பெரிதும் உதவும் எனவும் சுட்டிக்காட்டினர்.

இதன்போது நெடுந்தீவு மக்களின் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில் கௌரவ ஆளுநர் பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். நெடுந்தீவுக்கு வேறெந்த வகையிலும் குடிநீர் விநியோகத்தை வழங்க முடியாத நிலையில், கடல்நீரைச் சுத்திகரித்து நன்னீராக்கி வழங்கும் செயற்பாடே ஒரே தீர்வாக அமைவதாக அவர் தெரிவித்தார். 

அத்துடன் அங்கு ஏற்கனவே இயங்கி வரும் கடல்நீரை நன்னீராக்கும் எதிர்ச் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு (Reverse Osmosis Plant) நிலையத்தின் ஊடாக மக்களின் முழுமையான தேவைகளை ஈடுசெய்ய முடியவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அங்கு புதிதாக மற்றுமொரு எதிர்ச் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தார். 

இவ்வாறான புதிய திட்டங்களுக்கு, தற்போதைய செயற்றிட்டங்களில் எஞ்சியுள்ள சேமிப்பு நிதியினைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துப் பரிசீலிக்குமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியினர் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டனர். மேலும், தற்போதைய குடாநாட்டு குடிநீர் விநியோகத் திட்டத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவதற்கான செலவீனம் மிக அதிகம் என்பதைக் கருத்திற்கொண்டு, யாழ்ப்பாணத்தில் மழைநீர் நேரடியாகக் கடலுக்குச் சென்று கலப்பதைத் தடுத்து, அதனைச் சேமித்துப் பயன்படுத்துவதற்கான மாற்றுத் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பிரதிநிதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள மாற்று நடவடிக்கைகள் மற்றும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாநகருக்கான கழிவுநீர் முகாமைத்துவ வலையமைப்புத் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவவுள்ளமை தொடர்பிலும் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது. 

அத்துடன், இந்த பாரிய திட்டத்துக்கான கேள்விகோரல் நடவடிக்கைகள் இந்த ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர்கள் உறுதியளித்தனர். மேலும், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்தும் விசேட திட்டத்தில், வடக்கு மாகாணத்தில் காணப்படும் நலிவடைந்த உள்ளூராட்சி மன்றங்களும் உள்வாங்கப்பட்டு அவற்றுக்கான முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!