யாழ்ப்பாணத்தின் நீர்த்தேவைக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?
இவை இரண்டில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு முக்கியமாகப் பட்டால் தொடர்ந்து படியுங்கள் இல்லையேல் தட்டி விட்டுச் செல்லுங்கள் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக சற்று நீண்டதாக அமைந்துவிட்டது.
வடக்கிற்கே வளம் சேர்க்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் உயிர் மூச்சாக விளங்கும் இரணைமடுக் குளத்திற்குத் தொடருகின்ற பெரும் ஆபத்து.
யாழ்ப்பாணத்திற்குக் குடிதண்ணீர் என்னும் பெயரில் உணர்ச்சி பூர்வமான வசனங்களின் மூலமும், தாய் பிள்ளை என்றும் மக்களின் மண்டையைக் கழுவி இரணைமடுக்குளத்தையும், கிளிநொச்சி விவசாயிகளையும் இல்லாது ஒழிக்கப் புறப்பட்டு இருக்கிறது ஒரு கூட்டம்.
இவர்களின் உண்மையான நோக்கம் யாழ்ப்பாணத்திற்குக் குடிநீரைப் பெற்றுக் கொடுப்பது அல்ல. இரணைமடுக் குளத்தில் இருந்து நீரை எடுப்பது அல்லது இரணைமடுவுக்கு வர இருக்கின்ற நீரைத் தடுப்பது ஆக ஒட்டுமொத்தத்தில் இவர்களுக்கு இரணைமடுக் குளத்தையும் அத்துடன் எமது மீன் வளத்தையும் இல்லாது ஒழிப்பதுமே முழு நோக்கம்.
இதுவரை காலமும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணையோடு இரணை மடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குத் தண்ணீர் எடுப்பதற்கு முற்பட்டார்கள். அந்த முயற்சி பெருமளவில் வெற்றி அளிக்காமல் போகவே தற்பொழுது இரணைமடுக் குளத்திற்கு நீர் வரும் மூல ஆறாக இருக்கின்ற கனகராயன் ஆற்றை மறித்து மாங்குளத்தில் கரிப்பட்ட முறிப்பு என்னும் இடத்தில் ஓர் குளத்தைக் கட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள்.
குளங்கள் கட்டுவது நல்லது தான். ஆனாலும் இரணைமடுக் குளத்திற்கு வருகின்ற நீரை மறித்து மாங்குளத்தில் வைத்துக் கொண்டால் இரணைமடுக் குளத்திற்கு போதிய நீர் வந்து சேராது. இதனால் இரணமடுக்குளம் பாதிக்கப்படும்.
இந்த இரணைமடுக் குளத்திற்கு போதிய அளவு நீர் இல்லாவிட்டால் அதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் 22,000 ஏக்கருக்கு மேற்பட்ட நெல் உற்பத்தி பாதிக்கப்படும்.
இந்த நெல் உற்பத்தி இல்லாது போனால் எமது பொருளாதாரம் மட்டும் பதிப்படையது நமக்கான முக்கிய உணவுத்தேவைக்கே நாம் கையேந்தும் நிலைமை வரும். இவர்கள் பல தடவை கூறுகிறார்கள்.
கிளிநொச்சி விவசாயிகள் சிறுதானியங்களையும் செய்ய வேண்டும் . அதனால் நீரை மிச்சம் பிடிக்கலாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் எமது நாடோ சிறுதானியத்தைச் சிறு உணவாகவே கொண்டுள்ளது.
எமது பிரதான உணவு நெல். அதாவது அரிசியே ஆகும். இதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகள் பல. வடக்கைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் இப்பொழுது முழு நேர விவசாயிகள் இல்லாமல் போய்விட்டார்கள். பெரும்பாலானோர் பகுதி நேர விவசாயிகளாகவே உள்ளார்கள்.
அதற்குக் காரணம் நாட்டு நிலைமை மட்டுமல்ல,, பயிர்த்தொழிலுக்குப் போதிய அளவு வழிகாட்டல்களும், மக்களிடம் இருக்கக்கூடிய வறுமையும். அத்தோடு கூலி ஆட்கள் பற்றாக்குறையும். இரணைமடுக் குளத்தை இவர்கள் இல்லாது ஒழிக்க முன்வைக்கின்ற காரணங்களைப் பார்த்தால் இவர்களுடைய பரந்த அறிவு உங்களுக்கே தெரிந்துவிடும்.
இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் முதலாவது போதிய அளவு நீர் முகாமைத்துவம் இல்லை என்பது. அதாவது தண்ணீர் வீண்விரயமாக்கப்படுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால் வாய்க்கால்களும், வரம்புகளும் சீமேந்தால் கட்டப்பட வேண்டும். இல்லையேல் வரம்பில் உள்ள நண்டு அளைகள் (துளை /ஓட் டை) மூலமாக நீர் வெளியேறும். அடுத்தபடியாக இப்பொழுது சிறு போகம் முடிந்த பின்பும் இரணைமடுக் குளத்தில் 20 அடி தண்ணீர் இருக்கிறது என்கிறார்கள்.
பொதுவாகவே குளங்கள் செவ்வக வடிவில் இருப்பதில்லை. அதிலும் இரணைமடுக்குளம் நீர்மட்டம் உயரும் பொழுது பரந்த இடத்தையும், அது வற்றும் பொழுது சிறிய இடத்துக்குள்ளும் அதன் நீரை அடக்குகிறது.
மாரி காலத்தில் இருக்கின்ற 36 அடி தண்ணீர் பல டி.எம்.சி ஆகவும் கோடை காலத்தில் இருக்கின்ற தண்ணீர் குறைந்த டி.எம்.சி ஆகவும் இருக்கிறது.
காரணம் குளத்தின் ஆழ அகலம். ஒட்டுமொத்தமாக எவ்வளவு அடி தண்ணீர் இருக்கிறது என்கின்றதை மட்டும் கணக்குப் பார்க்கக் கூடாது. கோடை காலத்தில் எவ்வளவு? மாரி காலத்தில் எவ்வளவு? எத்தனை அடியில் எவ்வளவு சதுர மைல்கள் அடங்கி இருக்கிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.( கல்விமான்களால் மறைக்கப்பட கணக்கு)
அடுத்தபடியாக வான் பாய்கின்ற தண்ணீர் வீணாகப் போகிறதாம்!
இதுதான் இவர்கள் இந்த இயற்கைக்கே வைக்கும் ஒட்டுமொத்த உலையாகும். நம்மைச் சுற்றியுள்ள கடலானது நீர்மட்டம் ஏறி இறங்குகின்ற அளவிலேயே இருக்கிறது. உதாரணமாக ஆனையிறவு , தொண்டமானாறு, பண்ணைக்கடல் சுண்டிக்குளம் மற்றும் மன்னார்க் கடலேரிகள் போன்ற இடங்களெல்லாம் மாரி காலங்களில் நீர் நிரம்பியும், கோடை காலங்களில் நீர் வற்றியும் போகிறது. மாரிகாலங்களில் இந்த கடல் மட்ட உயர்வுக்கு மழை நீர் கடலில் கலப்பதால் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்கிறது. ஒட்டுமொத்த மழை நீரையும் நாம் தடுப்போமேயானால் கோடை காலங்களில் இருப்பது போல் இந்த கடலேரிகள் பாலைவனமாக மாறிவிடும்.
இதற்கு எந்த ஆராய்ச்சியோ படிப்பறிவோ தேவையில்லை. கண்ணூடாகப் பார்க்கக்கூடிய விடயம். இந்த கடலேரிகள் .பெருமளவு இறால் உற்பத்திக்கும் ,,மீன்களின் இனப்பெருக்கத்துக்கும் ஏற்ற இடமாகவும் இருக்கிறது. வீணாகிப் போகின்ற தண்ணீர் என்று இவர்கள் சொல்வது மழைக்காலங்களில் அளவுக்கு அதிகமாக தேங்குகின்ற நீர் வான் பாய்ந்து கடலில் சேர்வது தான்.
இவர்கள் குறிப்பிடும் முக்கிய காரணம் இந்தக் கடலில் சேர்க்கின்ற நீரை நாம் தடுத்துக் கடலுக்கு நீர் போகாமல் ஒட்டுமொத்தமாக எமது சேவைக்குப் பயன்படுத்துவோமேயானால் அதே நமது கடலேரிகள் உப்பு ப் படிந்து நமது மீன்வளம் அழிந்துவிடும். இது எமக்கு வரும் மீன்வளத்தை மட்டும் அழிக்காது.
சதுப்பு நிலக் காடுகள் என்று சொல்லக்கூடிய காடுகளையும் அழித்து உப்புத்தன்மை எல்லாப் பக்கங்களாலும் ஊருக்குள் வந்து விடும். இதைக் கருத்தில் கொள்ளாது தண்ணீர் வீணாகப் போகிறது என்று ஒப்பாரி வைக்கிறார்கள். அடுத்ததாக இவர்கள் முன்வைக்கும் காரணம் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகிறது என்று.
நான் இரணைமடுக் குளத்துக்கு அருகில் பிறந்து வளர்ந்தவன். கிளிநொச்சியைச் சுற்றி இருபது(20) கிலோ மீற்றர் தூரத்திற்கு இருக்கின்ற வயல்கள், வாய்க்கால்கள்,, ஒதுக்கப்பட்டிருந்த நிலங்கள் ஆறுகள் குளங்கள் என்று அனைத்தும் எனக்கு அத்துப்படி.
வான்பாய்கின்ற நீர் வழிந்தோடும் வழிகள் எல்லாம் வயல்கள் ஆக்கிவிட்டு இப்பொழுது வெள்ளம் வருகுது என்று அழுகின்ற அத்துமீறல்காரர்களுக்கு நாங்கள் காது கொடுக்க முடியாது.
70 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வழங்கப்பட்ட அனைத்து அத்துமீறல் காணிகளுக்குமான அனுமதிகளை மீளப் பெற வேண்டும். கிட்டத்தட்ட தற்பொழுது சிறுபோகம் முடிந்ததும் 20 அடி தண்ணீர் இருப்பதாகக் கூறுகின்றார்கள். இந்த 20 அடி தண்ணீர் என்பது ஒருவேளை இந்த ஆண்டு மழை பெய்யாதுபோனால் அடுத்த ஆண்டு மழைபெய்யும் வரை எம்மைப் பாதுகாப்பதற்கான நீராகும்.
நாம் குறைந்தபட்சம் 16 மாதங்களுக்கு இரணைமடுக் குளத்தையும், இயற்கையையும் பாதுகாக்கப் பயன்படுத்துவதற்கான நீராகும் . வாரத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை வாய்க்கால்கள் மூலம் நீர் திறந்து விடப்படும்.
காரணம் மிருகங்களுக்காகவும்,, பறவைகளுக்காகவும். அடுத்து மழை பொய்த்து விட்டால் காலப்போகம் அல்லது பெரும் போகம் என்று சொல்லக்கூடிய மாரிகால நெற்செய்கைக்குத் தண்ணீர் வேண்டும்.
மேலும் குளத்தில் இருக்கின்ற உயிரினங்கள் மீன் வகைகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் வேண்டும். இப்படி மழையில்லாத காலத்தில் குளத்தில் குறைந்த அளவில் நீரைத் தேக்கி வைத்து நமது குளத்தில் இருக்கின்ற மீன் வளத்தையும் அங்கே இருக்கக் கூடிய உயிரினங்கள் ஆகிய முதலை முதல் நுண்ணுயிர்கள் வரையும் எம்மால் பாதுகாக்க முடியாது.
காரணம் குறைந்த அளவு நீர் சூடாகி விடுவதால் பாசிகள் முதல் கொண்டு மீன் முட்டைகள் வரை நீரின் சூட்டில் அழிந்து விடும். இதைவிடச் சிலவகை உயிரினங்கள் ஆழமான நீரிலேயே உயிர்வாழும். நாம் நீரை மட்டும் கணக்கிடாமல் நீரில் இருக்கக்கூடிய அனைத்து விடயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இப்படிப் பெருஞ் சவால்கள் இந்த குளத்தின் நீரில் இருப்பது என்பதை இவர்கள் கொஞ்சம் கூடக் கருத்தில் எடுக்கவில்லை. எம்மிடம் இவ்வளவு சவால்கள் இருக்கின்ற பொழுது நாம் எப்படி இரணைமடு நீரைப் பங்கிடுவது. இரணைமடு நீர் இருக்கின்ற பொழுது மட்டும்தான் நாம் எடுப்போம்.
மற்றக் காலங்களில் கடல் நீர் சுத்திகரிப்போம் என்கின்ற ஒரு கதையைக் கூறுகிறார்கள். இந்தக் கடல் நீர் சுத்திகரிப்பினால் பெறப்படுகின்ற நீரில் எந்த விதமான உயிர்ச் சத்துக்களும் இருக்கப்போவதில்லை இதனை தொடர்ந்து குடித்தால் பல சத்துக்குறைபாடுகள் ஏற்படும் பின்பு அதற்கும் சத்து மாத்திரைகளைத்தான் உட்க்கொள்ளவேண்டும்.
பாலைவனத்தில் பயன்படுத்துகிறார்கள் நாம் நீர்வளம் உள்ள நாட்டில் ஏன் பயன்படுத்தவேண்டும்? அதைவிட இதற்கான முதலீடும் பராமரிப்பு செலவும் மிகமிக அதிகம். இந்தக் கடல் நீர் சுத்திகரிக்கும் இயந்திரமானது பழுதடைந்து விட்டால் அதைப் பழுது பார்ப்பதற்குப் பல மில்லியன்கள் அதாவது கோடிகள் தேவை என்று கூறுகிறார்கள்.
ஆகவே இருக்கக்கூடிய சவால்களில் இதற்கான பராமரிப்புச் செலவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நம்மவர்களின் பராமரிப்பின் இலட்சணம் ஊரே அறிந்ததே, இந்த பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும் பட்சத்தில் அல்லது ஒருவேளை இயந்திரம் பழுதாகி விட்டது என்றால் எமக்கு குடிநீர் இல்லை இரணைமடுவில் இருந்து தான் வர வேண்டும் என்று கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் ஆன ஒரு சண்டையை உருவாக்குவார்கள்.
அதேவேளை இந்தப் பராமரிப்புச் செலவெல்லாம் அதிகரித்து விட்டது என்று மக்கள் மீது அளவுக்கு அதிகமான கட்டணத்தை திணிப்பார்கள். இவை எல்லாவற்றையும் சேர்த்துத் சமாளிக்க முடியாது என்று பின்பு தனியாருக்கு தாரைவார்த்து விடுவார்கள். யாழ்ப்பாணத்துத் தண்ணீர் குடிநீருக்கு உகந்தது அல்ல என்று சொல்பவர்கள் உண்மையாகச் செயல்படுபவர்களாக இருந்தால் அதற்கு நிரந்தரமான தீர்வைத் தேட வேண்டும்.
அதை விட்டு மக்களை அச்சமூட்டி போத்தல் தண்ணீர்ப் பாவனைக்குத் தள்ளுகிறார்கள். யாழ்ப்பாணத்திற்கு இருக்கும் தண்ணீர் பற்றாக்குறை என்பது ஒட்டுமொத்த நீர் தேவை இதை வெறும் குடிநீர் பிரச்சினையாக சுருக்கி குடிநீர் பிரச்சனைக்கு மட்டும் தீர்வு கண்டால் எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் எந்த விதமான தொழிற்சாலைகளையும் உருவாக்க முடியாது.
அதேவேளை மீன்பிடி விவசாயம் என அனைத்தும் கேள்விக்குறி ஆகிவிடும் இதற்கான சரியான தீர்வு மகாவலி நீரை வடக்கிற்கு கொண்டு வருவது மட்டும்தான்.
தற்பொழுது உள்ள NPPஅரசால் அது சாத்தியப்படக்கூடும் ஆகவே இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மகாவலி நீரை குழாய்களின் மூலமாக வடக்கிற்கு கொண்டு வந்து வடக்கை வளம் பெறச் செய்ய வேண்டும்.
பொதுவாக யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற குளங்களுக்கு நீரை வழங்குகின்ற பொழுது நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் இல்லையேல் இப்பொழுது இருக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் என்றோ ஒரு நாள் யாழ்ப்பாணம் மனிதர் வாழ்வதற்கு பொருத்தம் இல்லாத பூமியாக மாறிவிடும்.
மகாவலி நீரை வடக்கிற்குக் கொண்டு வருவது 1850 களிலேயே இங்கிலாந்து ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம். இன்று நாம் குழாய் மூலம் அந்நீரை வடக்குக்குக் கொண்டு வந்தால் வடக்கில் இருக்கின்ற பல குளங்களை நிரப்பலாம்.
ஒட்டுமொத்தமாக 1 லட்சம் ஹெட்டேயர் நிலங்கள் பயிர்ச் செய்கைக்கு ஆண்டு முழுவதும் உகந்ததாக மாற்றப்படும். அதேவேளை குழாய்களில் இயந்திரங்களைப் பொருத்தி மின்சாரமும் உற்பத்தி செய்யலாம்.(அனுராதபுரம் கடல்மட்டத்தில் இருந்து 81 மீட்டர் உயரத்திலும் இரணைமடு கடல்மட்டத்தில் இருந்து 31 மீட்டர் உயரத்திலும் இருக்கிறது) இந்தத் தரைத் தோற்றமானது குழாய்களில் மிகவேகமாக நீரைக் கடத்தும்.
இதுவே நீர்மின் உற்பத்திக்குச் சிறப்பு. இதனால் நாம் காற்றாலை, சூரியமின் உற்பத்திக்கோ செல்லத் தேவை இல்லை. இவைகளின் மறு சுழற்சிக்கான சவால்களும் இல்லாமல் போகிறது. சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.
இவை தவிர பல குளங்களில் நன்னீர் மீன் வளர்ப்பு, இறால், நண்டு வளர்ப்பு என்று. பெரும் பொருளாதார நன்மைகள் உண்டு. அப்பொழுது மக்கள் விவசாயம் மீன்பிடி என்று எல்லாவற்றிலும் பெரும் நன்மைகளை அடைவார்கள். எல்லா விடயங்களிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும்.
அதை முதலில் பல கோணங்களில் ஆராய்ச்சி செய்ய வேண்டும். மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். நம்மவர்கள் இவைகளைச் சீராகச் செய்வதில்லை . இலங்கை நிறையவே நீர்வீழ்ச்சிகளையும், ஆறுகளையும் கொண்ட ஒரு நாடு.
நீரில் இருந்து போதிய அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். உதாரணமாக இலங்கையில் நீர் மின் உற்பத்தியில் இருக்கின்ற இயந்திரங்கள் பழுதுபார்க்கப்படாமல் எரிபொருள் மூலம் இயங்கும் இயந்திரங்களை அரசியல்வாதிகள் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திய வரலாறு உண்டு.
பலர் மகாவலி நீரைக் கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்! ஏன்? குழாய்களின் மூலம் கொண்டு வருவதற்குக் கூடப் பலர் சம்மதிக்கவில்லையே? அவர்களின் போலி தமிழ் தேசியமும் இனவாத அரசியலுமே இதற்குக் காரணம் தமிழ்த் தேசியத்தின் முதல் கட்டமே தமிழர்களின் இருப்பை தக்க வைப்பதும் அவர்களின் பொருளாதாரத்தை வளர்ப்பதும் என்பதை கூட புரியாமலும் செய்யாமலும் இருக்கின்ற அரசியல்வாதிகளை களையெடுக்கும் வரை இதை நடைமுறைப்படுத்துவது குதிரை கொம்பு தான்.
மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும் இதுவரைக்கும் இவர்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்த செய்த சாதனைகள் என்ன அபிவிருத்தி வேண்டாம் தீர்வு தான் வேண்டுமென்று கோஷம் போட்டுக் காலத்தை கடத்தியதை தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை.
பாராளுமன்றத்தில் தொண்டை கிழிய கத்துவார்கள் அடுத்த முறை போய் புதிதாக ஒரு விடயத்தை பேசுவார்கள் பத்திரிகைகளில் அவைகள் செய்தியாக வருவது அவர்களுடைய அரசியல் நலன்களுக்கு போதுமாக இருக்கும்.
சென்ற மாதம் வைத்த கோரிக்கை இந்த மாதம் நிறைவேற்றவில்லையே என்று மீண்டும் அவர்களிடம் கேள்வி கேட்க மாட்டார்கள் காரணம் அவர்களோடு பின் கதவால் நட்புக் கொண்டாடும் நபர்கள் இவர்கள்.
ஆட்சிகளை தக்க வைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியவர்கள் எல்லாம் தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தரப் போகிறார்கள்? எப்பொழுது பெற்று தரப் போகிறார்கள்? வேண்டாம் நாடு என்று மக்கள் வெளியேறிக்கொண்டு இருப்பதனால் விகிதாசாரமும் விழுந்து போகின்றது தமது நிலங்களும் எமது இருப்பும் கேள்விக்குறியாகின்றது.
எனது அறிவுக்கு எட்டிய வரை எனது கருத்துக்களை பதிவிட்டு உள்ளேன் சிந்திப்பதும் செயல்படுவதும் உங்கள் கையில் ஆகவே எல்லோரும் தமக்குத் தெரிந்த விடயங்களில் தெளிவாகவும் அல்லது தெளிவில்லாமலும் எதிர்க்கிறார்கள்.
எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும் முதலில் அது எவ்வளவு தூரம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக எல்லோருக்கும் தெரியும்.
இரசாயன உரங்களின் மூலம் செய்கை பண்ணப்படுகின்ற உணவுப் பொருட்கள் ஆபத்து ஆனவை என்று. ஆனாலும் தவிர்க்க முடியாமல் பலர் அதைச் செய்யத்தான் செய்கிறார்கள். இயற்கை விவசாயம். இன்று நசுக்கப்படுகிறது.
காரணம் இரசாயன நிறுவனங்களின் வியாபாரம். இரசாயன உரங்களும், மருந்துகளும் பாவனைக்கு வந்து இன்னும் நூறு ஆண்டுகள் கூடத் தாண்டவில்லை.
அதற்கு முன்பு உலகம் பயிர்ச் செய்கையையே மேற்கொள்ளவில்லையா ? ஆகவே எல்லாவற்றிற்கும் மாற்றம் உண்டு. நாம் தான் ஆராய மறுக்கிறோம்.
மகாவலித் தண்ணீருக்கு இனவாதம் பூசிக்கொண்டு எனக்குப் பிரதேச வாதம் பூசுபவர்கள் கிளிநொச்சி மண்ணிற்கு விரோதிகளே!
சோதிடர்: பரமேஸ்வரன் சுதாகர் சித்தர் சோதிட நிலையம் சூறிச் www.cittarastro.ch #Parameswaran #Suthakar @Parameswaran @Suthakar
(வீடியோ இங்கே )